வடக்கின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக தன்னை மாற்ற வேண்டும் என்ற பெருந்தன்மையோடு உள்ளார், யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரராக இருந்து, பின்னர் வடக்கில் பிரகாசித்தவன் என்ற பெருமையோடு கொழும்பில் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் கால்பதித்துள்ள வீரர் எட்வார்ட் எடின்.

பொதுவாகவே, விளையாட்டில் பிரகாசிக்கும் ஒவ்வொரு வீரருக்கும், குறித்த துறைக்கு வருவதற்கு ஏதோ ஒரு வித்தியாசமான அல்லது வியக்கத்தக காரணி இருக்கும்.  

சிறந்த கிரிக்கெட் வீரனாவதற்கு பயிற்சியும் நல்லொழுக்கமுமே முக்கியம் : சண்முகலிங்கம்

அந்த வகையில் ThePapare.com உடன் தனது கிரிக்கெட் ஆரம்பத்தைப் பகிர்ந்த எட்வார்ட் எடின் தனது நண்பர் ஒருவரை காண்பித்தார், இவரால் தான் நான் கிரிக்கெட்டிற்குள் நுழைந்தேன் என்று.

”கூடைப்பந்து போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த என்னை, கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வுக்கு தன்னோடு வருமாறு 2002ஆம் நண்பன் அழைக்க, அங்கு சென்றேன். அதன்போது நான் பாடசாலையின் 12 வயதின் கீழ் அணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டேன்” என எடின் தெரிவித்தார்.

பிற்காலத்தில் தனது சிறந்த துடுப்பாட்டம் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்க வைத்த இவர், யாழ் மத்திய கல்லூரி அணியின் முக்கிய மற்றும் நம்பிக்கைக்குறிய வீரராக மாறினார்.

Edin 01நீண்ட காலம் சிறப்பாகப் பிரகாசித்து வந்த இவர், 2009ஆம் அண்டு இடம்பெற்ற வடக்கின் பெரும் சமர் போட்டியில் முதல் முறையாக தனது பாடசாலை அணிக்காக பெரும் சமரில் பங்கு பற்றினார். அதன் பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்கள் பெரும் சமரில் விளையாடிய இவர், எதிரணியான சென் ஜோன்ஸ் அணி வீரர்கள் இலக்கு வைத்திருந்த முக்கிய வீரராகவும் இருந்துள்ளார்.

இதில் பெரும் சமரில் பங்கு கொண்ட முதல் வருடம் ஓரளவு பிரகாசித்த இவர், அதற்கு அடுத்த ஆண்டு பாடசாலை மட்டப் போட்டிகளில் மிகவும் சிறந்த முறையில் பிரகாசித்து வந்தார். எனவே, 2010ஆம் ஆண்டு வடக்கின் பெரும் சமரில் எடினின் துடுப்பாட்டத்தை முழு ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். எனினும் அவர் அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றியிருந்தார்.

[rev_slider dfcc728]

அது குறித்து அவர் குறிப்பிடுகையில், ”2010ஆம் ஆண்டு பெரும் சமரை பொறுத்தவரை என்னால் மறக்க முடியாத ஒரு வருடமாக உள்ளது. குறித்த ஆண்டில் எனது துடுப்பாட்டம் மிகவும் சிறந்த நிலையில் இருந்தது. அணியின் நம்பிக்கைக்குறிய வீரராக நான் இருந்தேன். அது போன்றே அனைவரும் பெரும் சமரில் எனது துடுப்பாட்டத்தை நம்பி இருந்தனர்.

எனினும், குறித்த ஆண்டு பெரும் சமரில் நான் இரண்டு இன்னிங்சுகளிலும் பிரகாசிக்கவில்லை. எனவே நான் அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றினேன். எனினும் அதற்கு அடுத்த ஆண்டு பெரும் சமரின் முதல் இன்னிங்சில் அரைச் சதம் கடந்ததுடன், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் பெற்றேன்” என்றார்.

குறிப்பாக தனது இளம் கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய இலக்குகளையும் சாதனைகளையும் மேற்கொண்டுள்ள எடின், இதுவரை ஒரு இரட்டைச் சதம், 5 சதங்கள் மற்றும் 35 அரைச் சதங்களை விலாசியுள்ளார். மற்றும் ஒரு பருவ காலத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையையும் எடின் கொண்டுள்ளார்.

வடக்கின் பெரும் சமரில் 36ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா சென் ஜோன்ஸ்?

இவரது அதி கூடிய ஓட்டமாக மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு எதிராகப் பெறப்பட்ட 247 ஓட்டங்கள் இருக்கின்றன. அதேபோன்று, இவர் வெறும் 12 பந்துகளில் அரைச் சதம் கடந்துள்ள ஒரு சாதனை வீரரும் கூட.  

இவ்வாறு பாடசாலைக் கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்த எடின், 2012ஆம் ஆண்டு Foundation of Goodness நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முரளி நல்லிணக்கக் கிண்ண கிரிக்கெட் தொடரில் யாழ் மாவட்ட அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடாத்தினார்.  

அத்தொடரில் முன்னணி வீரர்களைக் கொண்ட பல அணிகளை வீழ்த்திய யாழ் மாவட்ட அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றது. தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தெரிவாகிய எடின், அதன்மூலம் மலேசியாவிற்கு சென்ற ஒற்றுமை அணியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அங்கும் T-20 போட்டியொன்றில் அதிரடியாக ஆடி அரைச்சதம் கடந்த எடினது தொடர் ஆட்டத்தைப் பார்த்த குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர், அவரை கொழும்பில் கழகமொன்றுக்கு இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.


அதன்படி எடின், பிற்காலத்தில் கழக மட்டத்திற்கு இலகுவாகக் காலடி எடுத்து வைத்தார். எனினும் யாழில் இருந்து கொழும்பு சென்று கழக மட்டத்தில் விளையாடும்பொழுது பெற்ற சவால்கள் குறித்து எடின் எம்மிடம் இவ்வாறு கூறினார்.

”கொழும்பில் நான் முதலில் எதிர்நோக்கிய சவால், நாம் துடுப்பாடும் தரை மிகவும் வித்தியாசமாக இருந்தது. யாழில் பயிற்சி பெற்று விளையாடிய எனக்கு அங்கு அது வித்தியாசமாக இருந்தது. எனினும் கடுமையான பயிற்சிகள் எனக்கு அந்த சவாலை வெற்றியடையச் செய்தது.

அடுத்து, அங்கிருக்கும் போட்டித் தன்மை. யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கில் ஒரு அணிக்கு அதிக பட்சமாக 20 பேரே இருப்பார்கள். எனினும் கொழும்பில் ஒரு கழகத்திற்காக 40 க்கும் அதிகமானவர்களிடையே போட்டி நிகழும். ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் கழகத்தில் இணைவார்கள். எனவே, அது மிகப் பெரும் சவாலாகவே இருந்தது.

அடுத்து எம்மை அடையாளப்படுத்துவதற்கு மிகவும் கடினம். பயிற்றுவிப்பாளருக்கு ஒருவர் ஒருவராகப் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நாம் தான் எவ்வாறாவது எமது திறமையைக் காண்பிக்க வேண்டும். யாழிலும், வடக்கிலும் அதிகமானவர்களால் அறியப்பட்ட நான், கொழும்பில் எனது திறமையைக் காண்பித்து, அறிமுகம் பெறுவதற்கு சற்று கடினமாகவே இருந்தது.

இவை அனைத்திற்கும் மேலாக நாம் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினையான மொழிப் பிரச்சினையும் நான் எதிகொண்ட ஒரு முக்கிய சவாலாகும்” என்றார்.  

தனது எதிர்கால ஆசை குறித்து கருத்து தெரிவித்த எடின், தான் கிரிக்கெட்டின் மூலம் சிறந்த நட்பு, தலைமைத்துவப் பண்பு, விளையாட்டின் நோக்கம், நல்லிணக்கம் மற்றும் விளையாட்டு முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை எனப் பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

எனவே, எதிர்காலத்தில் நான் கற்ற விடயங்களை வடக்கின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கி, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க விரும்புகின்றேன்  எனத் தெரிவித்தார்.

தான் பாடசாலையில் இருந்து விலகி 6 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள இவ்வருட வடக்கின் பெரும் சமர் குறித்து கருத்து தெரிவித்த எடின், ”இம்முறை இரு கல்லூரிகளிலும் சிறந்த வீரர்களைக் கொண்ட அணியே இருக்கின்றன. இம்முறை போட்டி மிகவும் விறுவிறுப்பாக செல்லும். யார் வெற்றி பெற்றாலும், போட்டி சமநிலை அடைந்தாலும் இந்த வருட சமர் மிகவும் ஒரு சிறந்த போட்டி கொண்டதாக அமையும்” என தெரிவித்தார்.

தம்மோடு ஏற்படுத்திய உரையாடலின் இறுதியில் எடின், தனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிய தனது குடும்பத்தினர், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை மற்றும் Foundation of Goodness நிறுவனம் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கவும் மறக்கவில்லை.

அவரது எதிர்கால எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், மேலும் பல சாதனைகளை அவர் நிகழ்த்தவும் நாமும் அவரை வாழ்த்துக்கின்றோம்.