அகில தனன்ஞயவின் போட்டித் தடையும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமும்

1126

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் ஓய்வு பெற்று 2 மாதங்கள் கடந்து செல்வதற்கு முன், அவருடைய இடத்தை நிரப்புவதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்ட வீரராகக் கணிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற 25 வயதுடைய அகில தனன்ஞய தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பில் மிகப் பெரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார்.

அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை

இலங்கை அணியின் இளம் சுழல் வீரரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணி…

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீண்ட இடைவெளியின் பிறகு இலங்கை அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஒருவர் ஐ.சி.சியின் பந்துவீச்சு விதிமுறைகளை மீறி முறையற்ற பாணியில் பந்தை வீசுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு அகில தனன்ஞய போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் முழு கிரிக்கெட் உலகின் கவனமும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.

தொடர் தோல்விகள், மோசமான களத்தடுப்பு என பல்வேறு பிரச்சினைகளுக்கு முங்கொடுத்துள்ள இலங்கை அணிக்கு அண்மைக்காலமாக ஒருசில வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த அகிலவுக்கு இவ்வாறு போட்டித் தடை விதித்திருப்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவும், ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காலியில் கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜயவின் பந்துவீச்சு முறை பற்றி சந்தேகம் இருப்பதாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து 14 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சு முறை பற்றி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஐ.சி.சி அறிவித்திருந்தது. இருப்பினும், குறித்த பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் அவரை பந்துவீச அனுமதிக்க முடியும் எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்திருந்ததால் இங்கிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார்.

இதனையடுத்தே அவர், பந்துவீச்சு முறை குறித்த மேலதிக பரிசோதனைகளுக்காக கடந்த மாதம் 19ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகினார். அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிரிஸ்பேனில் உள்ள உயிரியல் மருத்துவ விளையாட்டு ஆய்வகத்தில் அவருடைய பந்துவீச்சு சுயாதீன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அகிலவுக்கு 18 பந்துகள் வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் 6 பந்துகள் மாத்திரமே 15 பாகைக்கு உட்பட்டதாக இருந்தமை கண்டறியப்பட்டது. ஏனைய பந்துகள் அனைத்தும் 16 பாகைக்கு அதிகமாக இருந்தது. இதனால் அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணி அனுமதிக்கப்பட்ட 15 பாகை கோண அளவினை விட நீண்ட கோணத்தில் பந்துவீசுவது கண்டறியப்பட்டிருந்தது. இதனால், அகில தனன்ஞய முறையற்ற விதத்தில் பந்துவீசுவது உறுதியானதையடுத்து அவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச ஐ.சி.சியினால் தடை விதிக்கப்பட்டது.

இதன்படி, அகில தனன்ஞயவுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாத போதிலும், தன்னுடைய பந்துவீச்சு முறையை மாற்றிக்கொண்ட பிறகு மறு ஆய்வுக்காக அவருக்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய முடியும். அதுவரை இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல் வீரர்

கிரிக்கெட் உலகைப் பொறுத்தமட்டில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் எர்னி ஜோன்ஸ், 1898ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் போது பந்தை முறையற்ற விதத்தில் வீசுவதாக முதன்முறையாக குற்றம் சுமத்தப்பட்டார்.

மெல்பேர்னில் நடைபெற்ற குறித்த போட்டியில் எர்னி ஜோன்ஸ் பந்துவீசிய போது கள நடுவர் ஜிம் பிளிப்ஸினால் நோ – போல் என அறிவிக்கப்பட்டு பந்தை வீசி எறிவதாக களத்திலேயே உறுதி செய்தார்.

Photo Album – Sri Lanka vs England | 5th ODI

இந்த நிலையில், கடந்த 10 வருடங்களில் இவ்வாறு பந்துவீச்சுப் பாணி குறித்த சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாப்வே, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களை நோக்கியே முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதில், மேற்கிந்திய தீவுகளின் மார்லன் சாமுவேல்ஸ், சுனில் நரைன், ஷேன் ஷில்லிங்கவேர்ட் ஆகிய வீரர்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷொயிப் அக்தர், சயீட் அஜ்மல், சபீர் அஹமட், மொஹமட் ஹபீஸ், பங்களாதேஷைச் சேர்ந்த அப்துல் ரஸாக், சொஹாக் காஸி ஆகிய வீரர்களையும் குறிப்பிடலாம்.

அத்துடன், நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், ஜிம்பாப்வேயின் மெல்கம் வோலர், பராஸ்பர் உட்செயா, தென்னாபிரிக்காவின் ஜொஹான் போத்தா ஆகியோரும் பந்துவீச்சு குற்றச்சாட்டுக்குள்ளாகினர்.

விதி மீறிய இலங்கை வீரர்கள்

இலங்கை அணிக்காக விளையாடிய ஒருசில வீரர்களும் இவ்வாறு பந்தை முறையற்ற விதத்தில் வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டு போட்டித் தடைகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் தர்மசேனவுக்கு எதிராக 1998ஆம் ஆண்டு பந்தை வீசி எறிவதாக முதன்முறையாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து 2000ஆம் ஆண்டு மீண்டும் தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்ட அவர், அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்தார்.

டெஸ்ட் தரவரிசையில் குசல் மெண்டிஸை முந்திய அஞ்செலோ மெதிவ்ஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட…

அதனைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டியின் போது இலங்கையின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு முறை பற்றி சந்தேகம் இருப்பதாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த இலங்கை அணியின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த சச்சித்ரவுக்கு இவ்வாறு போட்டித் தடை விதித்தமை இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற 7 மாதங்கள் எஞ்சியிருக்க, அவருக்கு போட்டித் தடையிலிருந்து மீள்வதற்கு 5 மாதங்கள் சென்றன.

ஆனாலும், 2014ஆம் ஆண்டு இறுதியில் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் களமிறங்கினாலும், அவருக்கு முன்பை விட திறமைகளை வெளிப்படுத்தி விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அவருக்கு ஒரேயொரு போட்டியில் மாத்திரமே விளையாடும் வாய்ப்பு கிட்டியது.

அதன்பிறகு, இலங்கை அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான தரிந்து கௌஷாலின் பந்துவீச்சுப் பாணி முறை தவறி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போதே தரிந்து கௌஷாலின் பந்துவீச்சுப் பாணி குறித்து நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்பிறகு, கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஷமிந்த எரங்கவின் பந்துவீச்சு பாணி முறையற்றதாகத் தெரிவிக்கப்பட்டு போட்டித் தடைக்குள்ளானார்.

ஆனால் இந்த மூன்று வீரர்களும் தமது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டாலும், அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிவில்லை.

ஆனால், முத்தையா முரளிதரன் மாத்திரம் போட்டியில் பந்துவீசும் போது நோ – போல் என அறிவிக்கப்பட்டு பந்துவீச்சு பரிசோதனைக்கு முகங்கொடுத்த ஒரேயொரு வீரராவார். 1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் போது டெரல் ஹெயார் என்ற கள நடுவரால் முரளிதரன் பந்தை வீசி எறிகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் பல சர்ச்சைகளும் வெடித்தன.

இதனையடுத்து முரளிதரன் தனது பந்து வீச்சை சரிசெய்து கொண்டு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி கிரிக்கெட் உலகில் மகத்தான சாதனையும் படைத்தார்.

அகிலவுக்கு வந்த சோதனை

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவின் கண்டுபிடிப்பான 25 வயதான அகில தனன்ஞய, 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அறிமுகமானார். அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடியிருந்த அகில தனன்ஞய, இரண்டாவது இன்னிங்ஸில் 115 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு அவரது பந்துவீச்சுப் பாணியில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டு போட்டித் தடைக்குள்ளாகினார்.

திலான் சமரவீரவின் ஓய்வும், குசலின் இரட்டைச் சதமும்

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு இலங்கை…

அதேபோல, முரளிதரன் மற்றும் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு சந்திக்க நேரிட்ட நெருக்கடியை தற்போது அகில சந்தித்துள்ளார். இந்த குற்றச்சாட்டிலிருந்து மீள்வதற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது பந்துவீச்சுப் பாணியை சீர்செய்து கொண்டு மிக விரைவில் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகும்.

இலங்கை கிரிக்கெட் கரிசணை

விதிமுறைகளை மீறி பந்துவீசிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள அகில தனன்ஞயவின் பந்துவீச்சுப் பாணியை சீர்செய்வதற்காக உயர் ஆற்றல் பிரிவினால் சகலவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உயர் ஆற்றல் பிரிவினால் அகில தனன்ஞய கண்காணிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, பந்துவீச்சு தடையை எதிர்நோக்கியுள்ள அகில தனஞ்சய, அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, அகில தனன்ஞசய அவ்வாறு செய்யாமல் தனது பந்து வீச்சு பாணியை உள்ளூர் போட்டிகளில் விளையாடி சரிசெய்துகொண்டு மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க