“அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரால் வீரர்களுக்கு மகிழ்ச்சி” – திமுத்!

Sri Lanka tour of New Zealand 2023

1145
Dimuth Karunaratne

அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணிக்கு இந்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பில் அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

>> இந்திய அணியிலிருந்து வெளியேறும் ஸ்ரேயாஸ் ஐயர்

இலங்கை அணியின் முன்னணி வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், அணிக்கு குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே கிடைக்கின்றன என்ற வருத்தத்தையும் நியூசிலாந்தக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, இரண்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளாக விளையாடுவதற்கு விருப்பம் தெரவித்துள்ளன.

குறித்த இந்தவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட திமுத் கருணாரத்ன, “இதுவொரு மிகவும் மகிழ்ச்சியான விடயம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். வருடத்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் என்பது மிகக்குறைவான காலப்பகுதியாகும்.

எட்டு மாதங்களுக்கு பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடினோம். அதனைத்தொடர்ந்து அயர்லாந்து தொடரும் இன்னும் 3 மாதங்களில் பாகிஸ்தான் தொடரும் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தொடரையடுத்த 8 மாதங்களுக்கு பின்னர் அடுத்த வருடம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் உள்ளது.

இந்த விடயமானது வீரர்களுக்கு மன ரீதியில் அழுத்தம் கொடுக்கலாம். குறித்த காலப்பகுதியில் உள்ளூர் போட்டிகள் மாத்திரமே உள்ளன. எனவே கிரிக்கெட் குறைவாக உள்ளதால், அதனை கைவிடுவதற்கும் வாய்ப்புள்ளது” என்றார்.

இதேவேளை இலங்கை வீரர்களின் கோரிக்கைக்கு அமைய அதிக டெஸ்ட் போட்டிகளை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிசெய்துவருவதாகவும், இந்த ஆண்டும் மேலும் சில டெஸ்ட் போட்டிகளை கிரிக்கெட் சபை பெற்றுக்கொடுக்கும் எனவும் திமுத் கருணாரத்ன எதிர்பார்த்துள்ளார்.

“நாம் கூறியதை செவிமடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை அதிகமான டெஸ்ட் போட்டிகளை எமக்கு பெற்றுத்தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போது ஒரு டெஸ்ட் போட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடரையடுத்து சுமார் 8 மாத காலப்பகுதி இடையில் உள்ளது. இதில் 3 அல்லது 4 டெஸ்ட் போட்டிகளை பெற்றுக்கொள்ள முடிந்தால் சிறப்பாக இருக்கும். டெஸ்ட் அணி என்ற ரீதியில் கடந்த சில வருடங்களாக சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவருகின்றோம். எனவே இந்த பிரகாசிப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு மேலும் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை பெற்றுக்கொடுத்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏப்ரல் 16ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<