பந்துவீச்சுப்பாணியை பரிசோதிக்க இந்தியா செல்லும் அகில தனஞ்சய

1377

ஐ.சி.சி. இனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்ட இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப்பாணியினை மாற்றியிருப்பதனை அடுத்து அது தொடர்பான பரிசோதனைகளுக்காக நாளை (1) இந்தியா பயணமாகின்றார்.

இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக கடந்த காலங்களில் உருவாகி வந்த அகில தனஞ்சய, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது முறையற்ற விதத்தில் பந்துவீசுகிறார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இடம்பெற்ற பரிசோதனைகளின் அடிப்படையில், அகில தனஞ்சய முறையற்ற விதத்தில் பந்துவீசுவது உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருந்தது.

அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை

எனினும், அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப்பாணியினை ஐ.சி.சி சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக மாற்றும் பட்சத்தில் மீண்டும் பந்துவீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடின முயற்சிகளுடன் அகில தனஞ்சய சுழல்பந்து பயிற்றுவிப்பாளர் பியல் விஜேதுங்கவின் ஆளுகையில் தனது பந்துவீச்சுப்பாணியினை மாற்றியிருந்தார்.

மாற்றியமைக்கப்பட்டிருக்கும் அகில தனஞ்சயவின் புதிய பந்துவீச்சுப்பாணி தொடர்பான பரிசோதனைகள் இந்தியாவின் சென்னை நகரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிலையத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இந்த பரிசோதனைகளின் போது நல்ல முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்காக அகில தனஞ்சயவினால் மீண்டும் பந்துவீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அகில தனஞ்சயவுடன் அவரது பந்துவீச்சுப் பாணியினை பரிசோதிக்கும் நிலையத்திற்கு சுழல் பந்துவீச்சாளர் பியல் விஜேதுங்கவும் பயணிப்பதோடு இருவரும், பந்துவீச்சுப்பாணி தொடர்பான பரிசோதனைகளை நிறைவு செய்து சனிக்கிழமை (2) நாடு திரும்புகின்றனர்.

இந்நிலையில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணி தொடர்பான விரிவான பரிசோதனை முடிவுகள் அடுத்த வாரமளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<