கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் அஜிங்கியா ரஹானே

114

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான அஜிங்கியா ரஹானே லெய்கெஸ்டர்ஷைர் அணிக்காக கவுன்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

>>இலங்கை –பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது<<

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக அசத்தியிருந்த அஜிங்கியா ரஹானே ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியினைத் தழுவிய போதும் அஜிங்கியா ரஹானே முதல் இன்னிங்ஸில் 89 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ஓட்டங்களும் குவித்து சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து காயம் காரணமாக விலகியிருந்த ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தினை பிரதியீடு செய்த ரஹானே, இந்திய அணி அடுத்ததாக ஆடும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுத் தொடரிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு இருக்க லெய்கெஸ்டர்ஷைர் அணிக்காக கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தமாகியிருந்த ரஹானே அவ்வணிக்காக 8 முதல்தர கிரிக்கெட் போட்டிகளையும், ஒருநாள் தொடரினையும் விளையாட நிர்ப்பந்தமாகியிருந்தது. எனினும் அவர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் ஆடியதன் காரணமாக லெய்கெஸ்டர்ஷைர் அணியுடன் இணைய முடியவில்லை.

>>ஜிம்பாப்வேயில் இலங்கை அணியுடன் இணையும் இளம் வீரர்கள்<<

இந்த நிலையில் இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்திற்குப் பின்னர் நேரடியாக இங்கிலாந்து செல்லும் அஜிங்கியா ரஹானே, ஓகஸ்ட் மாதம் நடைபெறும் கவுன்டி ஒருநாள் தொடரிலும் அதன் பின்னரான முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக அஜிங்கியா ரஹானே 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் ஹேம்ப்ஷைர் அணிக்காக கவுன்டி கிரிக்கெட் தொடரில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<