ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த கய்க்வாட்

63

ஒருநாள் போட்டிகள் (List-A) வரலாற்றில் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 7 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்கிற சாதனையினை துடுப்பாட்டவீரரான ருத்துராஜ் கய்க்வாட் நிலை நாட்டியிருக்கின்றார்.

>> WATCH – ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் இலங்கைக்கு மேலும் பின்னடைவு!

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த தொடரின் காலிறுதிப் போட்டிகளில் ஒன்று மஹராஷ்டிரா அணிக்கும் உத்தர பிரதேஷ் அணிக்கும் அஹமதாபாத்தில் வைத்து இன்று (28) இடம்பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் மஹராஷ்டிரா அணியின் தலைவரான கய்க்வாட் முதலில் துடுப்பாடிய தனது அணிக்காக ஆரம்பவீரராக களமிறங்கியதோடு சுழல்பந்துவீச்சாளரான சிவா சிங் வீசிய முதல் இன்னிங்ஸின் 49ஆவது ஓவரின் 7 பந்துகளுக்கும், 7 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி புதிய சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கின்றார். சிவா சிங் தனது ஓவரின் 5ஆவது பந்தினை “No Ball” ஆக வீசியது அவரது ஓவரில் கய்க்வாட் ஏழு சிக்ஸர்களைப் பெற்றுக் கொள்ள காரணமாக அமைந்திருக்கின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியொன்றில் Nothern District அணியின் துடுப்பாட்டவீரர்களான ஜோ கார்டர் மற்றும் ப்ரட் ஹம்ப்ட்டன் ஆகியோர் இணைந்து ஓவர் ஒன்றில் 43 ஓட்டங்கள் விளாசியது, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற நிகழ்வாகப் பார்க்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சாதனையினை இந்திய துடுப்பாட்டவீரரான ருத்துராஜ் கய்க்வாட் தற்போது தனியொருவராக சமன் செய்திருக்கின்றார்.

>> உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்ற ஆப்கான் ; இலங்கைக்கு சிக்கல்!

இதேவேளை ஓவர் ஒன்றில் 7 சிக்ஸர்களை விளாசிய ருத்திராஜ் கய்க்வாட், உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சதம் விளாசியதோடு மொத்தமாக 159 பந்துகளில் 16 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 220 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதோடு, தனது அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்கள் பெறவும் உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ருத்திராஜ் கய்க்வாட்டின் இரட்டைச் சதம் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்ற 39ஆவது இரட்டைச் சதமாகவும் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<