தீர்க்கமான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி பெறுமா?

819

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (27) மீண்டும் பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

களநிலவரங்கள்  

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது, அவர்களுக்கு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்கிற முன்னிலையினை வழங்கியிருக்கின்றது. எனவே அவர்கள் தொடரினை கைப்பற்ற எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் மாத்திரம் போதுமாக இருக்கின்றது. ஆனால் இலங்கை கிரிக்கெட் அணி தொடரினை தக்க வைக்க நாளைய போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்திருக்கின்றது. இது நாளைய போட்டியில் இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தானை விட அதிக அழுத்தம் இருப்பதனை சுட்டிக் காட்டுகின்றது. 

ஒருநாள் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி

அத்துடன் இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக்கினுள்ளும் உள்ளடங்குகின்றது. எனவே இது இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2023ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கிண்ண வாய்ப்பினை தீர்மானிக்க முக்கியமானதாக காணப்படுகின்றது. இதனால் ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரினை எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கட்டாயமாக கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தமும் இலங்கை வீரர்களுக்கு இருக்கின்றது.  

மாற்றம் காண வேண்டிய விடயங்கள் 

இலங்கை அணி

இலங்கை அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் மாற்றம் செய்ய வேண்டியது முதல் ஒருநாள் போட்டியில் உணரப்பட்டிருந்தது. முதல் ஐந்து துடுப்பாட்டவீரர்களில் பெதும் நிஸ்ஸங்க தவிர ஏனைய அனைவரும் மோசமாக செயற்பட்டிருந்தனர். இதில் குறிப்பாக அதிக அனுபவம் கொண்ட சிரேஷ்ட வீரரான தினேஷ் சந்திமால் மிகவும் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி தனது விக்கெட்டினை பறிகொடுத்தது கவலையினை ஏற்படுத்தியிருந்தது.  

அத்துடன் சகலதுறைவீரர்களாக களமிறங்கிய தனன்ஞய லக்ஷானும் போதிய அனுபவம் இன்றி ஏமாற்றம் தந்திருந்தார். அதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய துனித் வெலால்கேவிற்கு வாய்ப்பு வழங்கப்படாமல் தனன்ஞய லக்ஷானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்கிற கேள்வி முதல் ஒருநாள் போட்டியின் பின்னர் உருவாகியிருக்கின்றது. 

மறுமுனையில் பந்துவீச்சில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருந்தனர். இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே வேகப்பந்துவீச்சு கைகொடுத்திருந்தால் ஆப்கான் தமது துடுப்பாட்ட இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்களை நிச்சயமாக குறைத்திருக்க முடியும். இதற்கு போட்டியின் ஆரம்பத்தில் இலங்கையின் மோசமான களத்தடுப்பும் ஒரு காரணமாக இருந்தது எனக் கூறலாம். எனவே இந்த தவறுகள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும்.  

ஆப்கானிஸ்தான் அணி

முதல் போட்டியில் இலங்கை துடுப்பாட்டவீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர்கள் அழுத்தம் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர்களால் அவ்வாறான ஒரு ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாது போயிருந்தது. அதேநேரம் களத்தடுப்பிலும் ஓரளவு சுமாராகவே அவர்கள் செயற்பட்டிருந்தனர்.  

பெதும் நிஸ்ஸங்கவின் திறமையை புகழும் நவீட் நவாஸ்!

ஆப்கானிஸ்தான் அணியினை பொறுத்தவரை அவர்கள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தங்களது சுழல்பந்துவீச்சாளர்களினை சரியாக உபயோகப்படுத்துவதற்கு தயார்படுத்துவதோடு, களத்தடுப்பிலும் சிறந்த முறையில் செயற்பட வேண்டும்.  

பாராட்டப்பட வேண்டியவை  

ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்பவீரர்கள் இருவரது துடுப்பாட்டம் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாக இருக்கின்றது. அதில் குறிப்பாக இப்ராஹிம் சத்ரான் அட்டகாசமான சதம் ஒன்றினை விளாசியிருந்தார். அத்தோடு ஆப்கானிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவருமே அசத்தலாக செயற்பட்டனர்.   

மறுமுனையில் இலங்கை அணிக்காக வனிந்து ஹஸரங்க சகலதுறைவீரராக முதல் ஒருநாள் போட்டியில் அசத்தியிருந்தார். பந்துவீச்சில் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க அரைச்சதம் ஒன்றினை விளாசி போட்டியின் இறுதி வரை இலங்கை அணிக்கு வெற்றியினைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்திருந்தார். ஒரு சகலதுறைவீரராக வனிந்து ஹஸரங்க பொறுப்புடன் ஆடியது பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.  

அணி மாற்றங்கள்  

  • இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் குழாத்தினுள் அறிமுக துடுப்பாட்டவீரர் நுவனிது பெர்னாண்டோ மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் முதல் போட்டியில் சரியான ஆட்டத்தினை வெளிப்படுத்தாத ஓரிரு வீரர்கள் நாளைய போட்டியில் மாற்றப்படலாம். அதாவது அஷேன் பண்டார மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அணியில் வருவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அத்தோடு நாளை புதிய வீரர்களில் ஒருவருக்கும் சர்வதேச அறிமுக வழங்கப்படலாம்.   

எதிர்பார்ப்பு XI 

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, அஷேன் பண்டார, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, லஹிரு குமார 

  • ஆப்கானிஸ்தான் 

ஆப்கானிஸ்தான் அணியினைப் பொறுத்தவரை இரண்டாவது ஒருநாள் போட்டியில்  மாற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே அணியே நாளைய மோதலிலும் களமிறங்க முடியும்.  

எதிர்பார்ப்பு XI 

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), நஜிபுல்லா சத்ரான், மொஹமட் சத்ரான், மொஹமட் நபி, முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, யமின் அஹ்மட்சாய் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<