உலகக் கிண்ண இந்திய குழாம் அறிவிப்பு; அனுபவ வீரர் இணைப்பு

ICC World Cup 2023

154

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தை இந்திய கிரிக்கெட் சபை இன்றைய தினம் (05) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனது. 

ரோஹித் சர்மா தலைமையில் பெயரிடப்பட்டுள்ள இந்த குழாத்தில் உபாதைகளுக்கு முகங்கொடுத்து மீண்டும் அணிக்கு திரும்பியிருந்த கே.எல்.ராஹூல், சிரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் உலகக் கிண்ண குழாத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர்.  

ரோஹித், சுப்மன் அதிரடியில் Super 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

அதேநேரம் இந்திய குழாத்தை பொருத்தவரை மத்தியவரிசையின் ஒரு இடத்துக்காக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சம்சன் ஆகிய மூன்று வீரர்கள் போட்டியிட்டிருந்த நிலையில் சூர்யமார் யாதவ் அணியில் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.  

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராஹூல், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

சகலதுறை வீரர்களை பொருத்தவரை ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார். இதில் சுழல் பந்துவீச்சில் இந்திய அணிக்கு பலம் கொடுத்துவந்த யுஸ்வேந்திர சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை பொருத்தவரை அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், கடந்த காலங்களில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் மொஹமட் சமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரும் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர்.  

இதேவேளை மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளராக சர்துல் தாகூர் அணியில் இடம்பெற்றுள்ளார். சர்துல் தாகூர் பந்துவீச்சில் மாத்திரமின்றி பின்வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகக்கிண்ண தொடருக்கான இந்தியக் குழாம் 

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராஹூல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், சர்துல் தாகூர், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<