ஆப்கான் A அணிக்கு எதிராக இலங்கை இன்னிங்ஸ் வெற்றி

Afghanistan A Tour of Sri Lanka 2024

91

இலங்கை A அணிக்கும், ஆப்கானிஸ்தான் A அணிக்கும் இடையிலான உத்தியோப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியில், இலங்கை A கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.  

இந்த வெற்றியுடன் இலங்கை A அணி ஒற்றை டெஸ்ட் போட்டியைக் கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை A அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இளம் வீரர் சொனால் தினூஷவின் அபார சதம், லஹிரு உதார, விஷான் ரன்திகவின் அரைச் சதங்கள், 20 வயது இளம் சகலதுறை வீரர் வனுஜ சஹனின் சகலதுறை ஆட்டம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நிசல தாரகவின் அபார பந்துவீச்சு என்பன இலங்கை A அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின 

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி முதல் இன்னிங்ஸுக்காக 435 ஓட்டங்களைக் குவித்தது 

மத்திய வரிசையில் வந்து அபாரமாக ஆடிய இளம் வீரர் சொனால் தினூஷ 193 பந்துகளில் 16 பௌண்டரிகளுடன் 145 ஓட்டங்களை எடுத்திருந்தார். முதல்தரப் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும், 3ஆவது சதமாகவும் இது பதிவானது. இது தவிர, வனுஜ சஹன் 75 ஓட்டங்களையும், லஹிரு உதார 65 ஓட்டங்களையும், விஷாத் ரன்திக 63 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர் 

ஆப்கானிஸ்தான் A அணியின் பந்துவீச்சு சார்பில் ஜிஆஉர்ரெஹ்மான் 127 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நவீட் சத்ரான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் A கிரிக்கெட் அணி 67.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 198 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 

ஆப்கானிஸ்தான் A கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ரான் மிர் 114 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், அப்துல் ஹாதி 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனுஜ சஹன் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, நிஷான் பீரிஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். 

இதன் பின்னர் 237 ஓட்டங்கள் பின்தங்கியவாறு பலோ ஒன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் A கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 62.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன் இன்னிங்ஸ் தோல்வியினையும் சந்தித்தது. 

ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் இஜாஸ் அஹ்மட் அரைச் சதம் கடந்து 54 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, இம்ரான் மிர் 53 ஓட்டங்கள் பெற்று தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தார் 

இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக வேகப்பந்து வீச்சாளரான நிசல தாரக 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், நிஷான் பீரிஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர் 

போட்டியின் சுருக்கம் 

 

இலங்கை A அணி – 435 (101.3) சொனல் தினுஷ 145, வனுஜ சஹன் 75, லஹிரு உதார 65, விஷாத் ரன்திக 63, ஜியா-உர்-ரெஹ்மான் 6/1427, நவீட் சத்ரான் 9/27 

 

ஆப்கானிஸ்தான் A அணி – 198 (67.5) இம்ரான் மிர் 62, அப்துல் ஹாதி 45, வனுஜ சஹன் 5/58, நிஷான் பீரிஸ் 3/37   

 

ஆப்கானிஸ்தான் A அணி – 211 (62.3) இஜாஸ் அஹ்மட் 54, இம்ரான் மிர் 53, நிசல தாரக 6/42, நிஷான் பீரிஸ் 2/63   

 

முடிவு – இலங்கை A அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<