ஞானரூபனின் கோல் வேட்டையுடன் சென் மேரிஸ் இலகு வெற்றி

Champions League 2022

242

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி வாரத்திற்கான (13ஆம் வாரம்) நான்கு போட்டிகள் சனிக்கிழமையும் (10) ஒரு போட்டி ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றன. அவற்றில் சென் மேரிஸ், சுபர் சன், பொலிஸ், SLTB மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன.

குறித்த போட்டிகளின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்.

மொறகஸ்முல்ல வி.க எதிர் சென் மேரிஸ் வி.க

குருணாகலை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது.

எனினும், போட்டியின் 61ஆவது நிமிடத்தின் பின்னர் கோல் வேட்டையை ஆரம்பித்த தேசிய அணியின் முன்னாள் வீரர் ஞானரூபன் வினோத், போட்டி நிறைவடைவதற்குள் நான்கு கோல்களையும், ஜேசுதாசன் அமிட்டன் ஒரு கோலையும் பெற, போட்டி நிறைவில் 5-0 என இலகு வெற்றியைப் பதிவு செய்தது சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்.

எனவே, இம்முறை முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கால் பதித்த யாழ்ப்பாணம் சென் மேரிஸ் வீரர்கள் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் தொடரை நிறைவு செய்துகொண்டது. அவ்வணி இம்முறை தொடரில் 5 வெற்றிகளையும், மொறகஸ்முல்ல வீரர்கள் தொடரில் 4 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: மொறகஸ்முல்ல வி.க 0 – 5 சென் மேரிஸ் வி.க

சுபர் சன் வி.க எதிர் நிகம்பூ யூத் கா.க

காலி மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் நிலுக ஜனித் மற்றும் அந்தோனி ஆகியோர் நிகம்பு யூத் அணிக்கான கோல்களைப் பெற்று முதல் பாதியில் அவ்வணியை முன்னிலைப்படுத்தினர்.

எனினும், இரண்டாம் பாதியில் சுபர் சன் வீரர் கசுங்க இரண்டு கோல்களை பெற, ஓன் கோல் முறையில் ஒரு கோலும் கிடைக்க, சுபர் சன் அணி 7 நிமிட இடைவெளியில் 3 கோல்களைப் பெற்றுக் கொண்டது.

எனவே, போட்டி நிறைவில் சுபர் சன் வீரர்கள் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றனர்.

முழு நேரம்: சுபர் சன் 3 -2 நிகம்பூ யூத் கா.க

இலங்கை பொலிஸ் வி.க எதிர் சொலிட் வி.க

அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் சத்திர குமார் மற்றும் தனுஷ பெரேரா ஆகியோர் பொலிஸ் அணி சார்பாக இரண்டு கோல்களைப் பெற்றனர்.

எனினும், இரண்டாம் பாதியில் எந்தவித மேலதிக கோல்களும் பெறப்படாத நிலையில் பொலிஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் போட்டியை 2-0 என வெற்றி கொண்டனர்.

முழு நேரம்: இலங்கை பொலிஸ் வி.க 2 – 0 சொலிட் வி.க

SLTB வி.க எதிர் நியூ ஸ்டார் வி.க வி.க

களனிய கால்பந்து வளாக மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் றுவன் ஷானக இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டுக் கழகத்திற்காக (SLTB) ஒரு கோலையும், நியூ ஸ்டார் அணிக்காக அவ்வணியின் முன்கள வீரர் மொஹமட் அனஸ் இரண்டு கோல்களையும் பெற்றனர்.

எனினும், ஒரு கோல் பின்னிலையில் இருந்து இரண்டாம் பாதியை ஆரம்பித்த SLTB அணிக்கு இளம் வீரர்களான விஜேசுந்தரம் யோகேஷ், மொஹமட் சாஜித் ஆகியோர் தலா ஒரு கோலைப் பெற, ஆட்ட நிறைவில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் அவ்வணி வெற்றி பெற்றது.

முழு நேரம்: SLTB வி.க 3 – 2 நியூ ஸ்டார் வி.க

கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் சோண்டர்ஸ் வி.க

ஞாயிற்றுக்கிழமை கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.

எனினும், இரண்டாம் பாதியில் கிறிஸ்டல் பெலஸ் அணி பின்கள வெளிநாட்டு வீரர் மைக்கல் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் மூலம் இரண்டு கோல்களைப் பெற, அவ்வணி போட்டி நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 2 – 0 சோண்டர்ஸ் வி.க

                                   >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<