மீண்டும் தனது அதிரடியை ஆரம்பித்துள்ள ஏபி டி வில்லியர்ஸ்

441

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்ற நிலையில் போட்டிகள் அதிக விறுவிறுப்பினை ஏற்படுத்தியுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

அம்பத்தி ராயுடுவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில்….

நேற்றைய போட்டியில் மஷ்ரபி மொர்டசா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணி, சகிப் அல் ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா அணி, 187 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராங்பூர் ரைடர்ஸ் அணி வில்லியர்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டங்களின் உதவியுடன், 18.2 ஓவர்களில் வெற்றியிலக்கினை அடைந்தது.

போட்டியில் ராங்பூர் அணியின் ஆரம்பத்தை பொருத்தவரை மோசமாக அமைந்திருந்தது. முக்கியமாக அன்ரூ ரசலின் இரண்டாவது ஓவரில் கிரிஸ் கெயில் மற்றும் ரைலி ரொஸ்ஸோவ் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் பின்னர் ரசலின் ஹெட்ரிக் பந்துக்கு முகங்கொடுத்த வில்லியர்ஸ் சிக்ஸருடன் தனது ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார்.

இதனையடுத்து தனது வழமையான அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வில்லியர்ஸ், டாக்கா டைனமைட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை தினறடித்தார். 24 பந்துகளில் அரைச்சதம் கடந்த இவர், அடுத்த 26 பந்துகளில் 100 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இதில் வில்லியர்ஸ் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளை விளாசியிருந்தார். அதேநேரம், இவருடன் துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளுக்கு 85 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அத்துடன், இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்காக 184 ஓட்டங்களை விளாசினர். இவர்களது இந்த இணைப்பாட்டமானது பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியதுடன், T20 போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய இணைப்பாட்டம் என்ற சாதனையையும் பதிவு செய்தது.

டி20 தொடருக்கான பாகிஸ்தான் தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ….

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரையடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். எனினும், சர்வதே சரீதியில் இடம்பெற்று வரும் T20 தொடர்களில் விளையாடி வரும் இவர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக் மற்றும் ஐ.பி.எல். போன்ற தொடர்களிலும் விளையாடவுள்ளார்.

இதேவேளை வில்லிர்ஸின் இந்த அதிரடி ஆட்டத்துடன், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் எவின் லிவிஸும் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களை விளாசியிருந்தார். இலங்கை அணியின் திசர பெரேரா விளையாடும் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் லிவிஸ், குல்னா டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்யை போட்டியில் 47 பந்துகளில் சதம் கடந்திருந்ததுடன், 10 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளையும் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<