2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது பதவியிலிருந்து கடந்த வார இறுதியில் விலகுவதாக அறிவித்தார். இதனால் அந்த அணி புதிய பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இறங்கியது.
இந்நிலையில் தான், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த கீரன் பொல்லார்ட், தற்போது அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பதவி உயர்வைப் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் மும்பை அணியின் பிற சகோதர பிரான்ச்சைஸ் அணிகளான எம்ஐ நிவ்யோர்க் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகியவற்றிலும் விளையாடி வரும் இவருக்கு, டி20 லீக் தொடரொன்றில் ஒரு அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கிடைக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும்.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது பிணைப்பை அவர் மேலும் நீட்டித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஒரு வீரராக 13 ஆண்டுகள் நீடித்த தனது ஐபிஎல் பயணத்தில் மும்பை அணிக்காக 189 போட்டிகளில் விளையாடி 3,412 ஓட்டங்கள் குவித்துள்ளார். மேலும் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மும்பை அணி வென்ற 5 ஐபிஎல் சம்பியன் பட்டங்களையும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய கீரன் பொல்லார்ட், “மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் நான் பெருமையடைகிறேன். மும்பை இந்தியன்ஸ் எனது வாழ்க்கையிலும் கிரிக்கெட் பயணத்திலும் ஒரு மிகப்பெரிய அங்கமாக இருந்துள்ளது. இந்த அணி, வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் நான் பகிர்ந்துள்ள பிணைப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு வீரராகவும், பின்னர் பயிற்சியாளராகவும் இந்த பயணத்தை அனுபவித்தவன் என்ற முறையில், மும்பை இந்தியன்ஸ் எதைக் குறிக்கிறது என்பதையும், இந்த ஜெர்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள பொறுப்பையும் நான் நன்கு அறிவேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காகத் திருமதி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் முழு மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்து ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நேரத்தில், கீரான் பொல்லார்டின் பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.






















