அமெரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களுக்கு வீசா தாமதம்

22

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டிற்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாகியிருக்கும் நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீசா அனுமதி கிடைப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.  

இந்தியாவில் விளையாடுமாறு பங்களாதேஷிடம் ICC கோரிக்கை

குறிப்பாக அமெரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அலி கான் தனக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய சமூக வலைதள கணக்கு வாயிலாக தெரிவித்த நிலையிலையே, அமெரிக்க வீரர்கள் இந்தியா செல்வதில் சிக்கல்கள் நிலவுதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அலி கானைத் தவிர ஷயான் ஜஹாங்கீர்எஹ்சான் ஆடில் மற்றும் மொஹமட் மொஹ்சின் ஆகிய வீரர்களுக்கும் வீசா கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்த வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால்பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கடுமையான விதிகளின் காரணமாக இவர்களது விண்ணப்பங்கள் கூடுதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாகவே பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்திய வீசா வழங்குவதில் நிலவும் சிக்கலான நடைமுறைகள் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியினையும் நேரடியாகப் பாதித்துள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது. 

இந்த இக்கட்டான சூழல் குறித்து அமெரிக்க கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட சில நாடுகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கிரிக்கெட் உலகக் கிண்ணம் போன்ற மிக முக்கியமான தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு உரிய நேரத்தில் வீசா கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேநேரம் இந்த விடயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆகிய இருதரப்புக்களிலும் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் வெளிவரவில்லை.

பெப்ரவரி மாதம் தொடங்கவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் அமெரிக்க அணி தனது முதல் போட்டியில் இந்தியாவைச் சந்திக்கவுள்ள நிலையில், இந்தச் செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களைக் கொண்ட T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகளான ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம், கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களும் இந்தியா வீசா பெற அமெரிக்க வீரர்கள் போன்று இறுக்கமான நடைமுறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<