ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆரோன் பின்ச்

143
Finch announces retirement from one-day cricket

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரான ஆரோன் பின்ச் குறிப்பிட்டுள்ளார்.

>> T20 கிரிக்கெட்டில் சாதனை மழை பொழிந்த விராட் கோஹ்லி

அந்தவகையில் ஆரம்ப துடுப்பாட்டவீரரான ஆரோன் பின்ச் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை விளையாடவுள்ள அவரின் இறுதி ஒருநாள் போட்டி அவரின் 146ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாக அமையவுள்ளதோடு, அவர் மொத்தமாக 54 ஒருநாள் போட்டிகளில் தனது தாயக அணியினை தலைவராக பிரதிநிதித்துவம் செய்து விடைபெறவிருக்கின்றார்.

அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்கத் தடுமாறி வருகின்ற ஆரோன் பின்ச், தான் இறுதியாக விளையாடிய 7 ஒருநாள் இன்னிங்ஸ்களிலும் 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றார். இவ்வாறு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த மோசமான ஆட்டங்களே அவரின் ஓய்வுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை பின்ச் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் வரை அவுஸ்திரேலிய அணியினை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவரது ஓய்வு அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வட்டாரத்திற்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

அவுஸ்திரேலிய அணிக்காக அதிக ஒருநாள் சதங்களை பெற்ற அணித்தலைவர்கள் வரிசையில் 17 சதங்களுடன் ரிக்கி பொண்டிங் மற்றும் ஸ்டீவ் வோ இற்குப் பின்னர் மூன்றாவது இடத்தில் ஆரோன் பின்ச் காணப்படுகின்றார்.

ஒருநாள் போட்டிகளில் கடந்த 2013ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக அறிமுகம் பெற்ற பின்ச் இதுவரை ஒருநாள் 5401 ஓட்டங்களை 39.13 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

>> பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி வெற்றிபெற்ற இலங்கை!

ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதும் தொடர்ந்து T20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதோடு, அவுஸ்திரேலிய

அணியினை T20 போட்டிகளில் தலைவராகவும் வழிநடாத்துவார் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<