ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி சம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்து அசத்தியது.
துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 347 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சமீர் மின்ஹாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 113 பந்துகளில் 172 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஹமட் ஹொசைன் 56 ஓட்டங்களையும், உஸ்மான் கான் 35 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளையும், ஹெனில் படேல் மற்றும் கிலான் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- இலங்கை இளையோரை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
- சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இளையோருக்கு த்ரில் வெற்றி
-
இலங்கையை வீழ்த்தி தோல்வியடையாத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்
348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, 26.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இதன் மூலம், பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தீபேஷ் தேவேந்திரன் 36 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அலி ராஸா 4 விக்கெட்டுகளையும், மொஹம்மட் சையாம், அப்துல் சுப்ஹான் மற்றும் சைஃபா அஹ்சான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் சமீர் மின்ஹாஸ் தட்டிச் சென்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















