மீண்டும் குழாத்தில் ஆர்ச்சர்; திட்டத்தை மாற்றியது இங்கிலாந்து

177

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் நடைபெறவுள்ள தீர்மானமிக்க இறுதி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் இன்று (23) பெயரிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் நடைபெறுகின்ற முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. 

இனவெறி துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிட்டுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த திங்கட்கிழமை (20) நிறைவுக்குவந்த நிலையில் அப்போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமநிலை செய்தது. 

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமானதுமான போட்டிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது தற்சமயம் குழாத்தினை வெளியிட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக வெளியிடப்பட்ட குழாத்திலிருந்து நான்கு மாற்றங்களை மேற்கொண்டு தமது திட்டத்தில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

டெஸ்ட் அறிமுகம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்ஸன் குழாத்திலிருந்து நீக்கப்பட்டு மூன்று வீரர்கள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் வேகப் பந்துவீச்சாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் முடிவின் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி மென்செஸ்டர் செல்லும் வேளையில் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். 

இங்கிலாந்து அணியின் உப தலைவராக மொயீன் அலி நியமனம்

இந்நிலையில் தண்டனையின் பின்னர் ஜொப்ரா ஆர்ச்சர் மீண்டும் இங்கிலாந்து குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் கடந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் மற்றும் மார்க் வூட் ஆகியோர் மீண்டும் இங்கிலாந்து குழாமில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளுக்குமிடையிலான தீர்மானமிக்க இறுதி டெஸ்ட் போட்டி 24 ஆம் திகதி மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.  

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம்

ஜோ ரூட் (அணித்தலைவர்), ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், டொம் பெஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பேன்ஸ், ஜொஸ் பட்லர், ஸக் க்ரௌலி, சாம் கரன், ஒல்லி போப், டொம் சிப்லேய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<