இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை முடித்தார் வியாஸ்காந்த்

4274

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இமாலய ஓட்டங்களை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய  அணிக்கு முதல் முறை களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது சுழற்பந்து மூலம் தீர்க்கமான விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 428 ஓட்டங்களை பெற்று இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (24) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட இந்த இளையோர் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் அனுஷ் ராவத் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இந்தியாவுடனான தோல்வியை சந்தித்த முதல் டெஸ்ட் போட்டில் ஆடிய இலங்கை இளையோர் அணியில் இருந்து இந்த போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நவீன் பெர்னாண்டோ, துலித் வெல்லாலகே மற்றும் ஷஷிக்க துல்ஷான் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் வியாஸ்காந்த், சொனால் தினூஷ மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இதில் வியாஸ்காந்த் 36 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை தேசிய அணி ஒன்றில் இடம்பெறும் முதல் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரராக பதிவானார்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் விக்கெட்டை வலதுகை சுழற்பந்து வீச்சாளர் கல்ஹார செனரத்னவினால் வீழ்த்த முடிந்தது. இந்திய அணித்தலைவர் ரவாத் 11 ஓட்டங்களுடன் செனரத்னவின் பந்துக்கு போல்டானார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப வீரர் அதர்வா டயிட் மற்றும் பவன் ஷா ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரும் முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாடி 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது.

  காணொளிகளைப் பார்வையிட  

இந்த இருவரதும் இணைப்பாட்டமானது இளையோர் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களை சமப்படுத்துவதாகும். 2007ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற இலங்கை இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய இளையோர் அணியின் அபினவ் முகுந்த் மற்றும் தன்மாய் சிறிவாஸ்தாவா ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இவ்வாறான ஒரு நிலையில், செயற்பட ஆரம்பித்த வியாஸ்காந்த் அபாரமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அதர்வா டயிடின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை (260) முறியடித்த வியாஸ்காந்த் தேசிய அணிக்காக தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். டயிட் 172 பந்துகளில் 20 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 177 ஓட்டங்களை பெற்றார்.

டயிடின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின் இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு ரன் அவுட்களை பெற்றது இலங்கைக்கு ஆறுதலை ஏற்படுத்தியது. தேவதூத் பதிக்கல் 6 ஓட்டங்களுடன் ஓடும்போது ஆட்டமிழந்தார்.

பவன் ஷாஹ்வுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட ஆர்யான் ஜுவாலும் 41 ஓட்டங்களுடன் தேவையற்ற முறையில் ரன் அவுட் ஆனார்.

எனினும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிவரும் பவன் ஷாஹ் ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களுடன் இரட்டைச் சதத்தை நெருங்கியுள்ளார். அவர் இந்த ஓட்டங்களை பெறுவதற்கு 227 பந்துகளுக்கு முகம்கொடுத்து 19 பௌண்டரிகளை பெற்றுள்ளார். அவருடன் நேஹால் வதேரா 33 பந்துகளில் 5 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.     

இதன்போது இலங்கை இளையோர் சார்பில் ஆறு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் வியாஸ்காந்த் மற்றும் செனரத்னவினால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. 18 ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந்த் 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

நாளை (25) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.

போட்டியின் சுருக்கம்