இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2017/2018 பருவகாலத்துக்கான இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது.  

இதன் இறுதிப் போட்டியில் தேசிய அணி வீரர்களைக் கொண்ட பலம் பொருந்திய அணிகளான எஸ்.எஸ்.சி மற்றும் என்.சி.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.  

இதில் என்.சி.சி அணிக்காக தினேஸ் சந்திமால் சதம் அடித்து பலம் சேர்த்திருந்தாலும், எஸ்.எஸ்.சி அணிக்காக தனுஷ்க குணதிலக்க அபார சதம் பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் இம்முறை பருவகாலத்துக்கான கழகங்களுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் சம்பியன் பட்டத்தை எஸ்.எஸ்.சி அணி கைப்பற்றியது.

தனுஷ்க குணதிலக்கவின் சதத்தால் உள்ளூர் ஒருநாள் சம்பியனான SSC

இலங்கையின் பிரதான உள்ளூர்…

முன்னதாக நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான 4 நாட்களைக் கொண்ட முதல்தர போட்டியில் எஸ்.எஸ்.சி அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான T-20 தொடரில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தி என்.சி.சி அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இவை அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தேசிய அணி வீரர்கள், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியில் ஜொலித்துக்கொண்டிருக்கின்ற வீரர்கள் இப்போட்டித் தொடரில் விளையாடவுள்ளனர்.

எனவே இந்த தொடருடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான அனைத்து உள்ளூர் கிரிக்கெட் தொடர்களும் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், எதிர்வரும் 2 மாதங்களுக்கு இலங்கை அணி எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடவிட்டாலும், ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஆகஸ்ட், ஒக்டோபர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்கள் என்பன இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளன.  

எனவே, தற்போது நிறைவுக்கு வந்த உள்ளூர் போட்டித் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவுக் குழுவின் தலைவர் கிரெஹம் லெப்ரோய் இதற்கு முன் பல தடவைகள் தெரிவித்திருந்தார். அதிலும், அண்மைக்காலமாக ஒரு நாள் அரங்கில் தடுமாற்றத்தினை சந்தித்து வருகின்ற இலங்கை அணி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் நோக்கில் இளம் வீரர்களுக்கும் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதன்படி, அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மெதிவ்ஸ், அசேல, திசர

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால்…

  • துடுப்பாட்டத்தில் முன்னிலை பெற்ற மிலன்த

துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் ராகம கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த இடதுகை துடுப்பாட்ட வீரரான லஹிரு மிலந்த இம்முறை போட்டித் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக இடம்பிடித்தார். 6 போட்டிகளில் விளையாடி அவர் ஒரு சதம், 4 அரைச் சதங்களுடன் 448 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் காரணமாக, 23 வயதுடைய இளம் விக்கெட் காப்பாளரான லஹிரு மிலன்தவுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான போட்டித் தொடரில் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், இம்முறை உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் என்.சி.சி அணியை சிறப்பாக வழிநடத்தி T-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் இறுதிப் போட்டி வரை தமது தரப்பை அழைத்துச் சென்ற 23 வயதான அஞ்செலோ பெரேரா, குறித்த பட்டியலில் 380 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் 8 போட்டிகளில் பங்குபற்றி ஒரு சதம் மற்றும் 3 அரைச் சதங்களையும் குவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஒரு நாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சகலதுறை வீரரான அஞ்செலோ பெரேரா, இலங்கை அணிக்காக அவ்வப்போது வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டாலும், அதனை உரிய முறையில் பயன்படுத்தாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து அணியிலிருந்து ஒதுக்கப்பட்டார். எனினும், அஞ்செலோ பெரேராவின் அண்மைக்கால திறமைகள் நிச்சயம் அவரை தேசிய அணிக்குள் மீண்டும் உள்வாங்குவதற்கான நல்ல தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம்பெறுவதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற மற்றுமொரு வீரரான மஹேல உடவத்த, இம்முறை ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். என்.சி.சி அணிக்காக விளையாடி வருகின்ற 31 வயதான மஹேல, 8 போட்டிகளில் விளையாடி, 2 சதம் மற்றும் 2 அரைச் சதங்களுடன் 376 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை அணியின் அனுபவமிக்க வீரராக மஹேல உடவத்த விளங்கினாலும் உள்ளூர் போட்டிகளுக்கு மாத்திரம் முத்திரை குத்தப்பட்ட வீரராகவே கருதப்பட்டு வந்தார். எனினும் 2008ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட மஹேல, அதே வருடம் ஜிம்பாப்வே அணிக்கெதிரான தனது இறுதி ஒரு நாள் போட்டியிலும் விளையாடியிருந்தார்.  

அதேநேரம், குறித்த ஒரு வருட காலப்பகுதியில் வெறும் 9 ஒரு நாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர், 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 258 ஓட்டங்களை குவித்திருந்தார். எனவே, உள்ளூர் அரங்கில் போர்மில் இருந்து வருகின்ற மஹேல உடவத்தவின் எதிர்காலம் தொடர்பில் தெரிவுக் குழு மற்றும் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் அவதானம் செலுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

இந்நிலையில், இம்முறை உள்ளூர் கழக மட்ட ஒரு நாள் போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஏனைய வீரர்களாக திமுத் கருணாரத்ன(366 ஓட்டங்கள்), ஷெஹான் ஜயசூரிய(351 ஓட்டங்கள்), தரங்க பரணவிதாரன(341 ஓட்டங்கள்), அதீஷ நாணயக்கார(320 ஓட்டங்கள்), ரொஷேன் சில்வா(295 ஓட்டங்கள்) மற்றும் தனுஷ்க குணதிலக்க(250 ஓட்டங்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடர் காரணமாக தேசிய அணியில் இடம்பெற்றிருந்த ஒருசில வீரர்களுக்கு உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாது போனது.  

சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை எந்த உத்தியை தவறவிட்டது?

நடைபெற்று முடிந்த சுதந்திரக்…

எனினும், இறுதி நேரத்தில் இணைந்துகொண்ட எஸ்.எஸ்.சி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க, இறுதியாக நடைபெற்ற 3 போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 250 ஓட்டங்களை குவித்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதிக ஓட்டங்களைக் குவித்த துடுப்பாட்ட வீரர்கள்

வீரர் போட்டிகள் ஓட்டங்கள் சராசரி 100 50
லஹிரு மிலன்த (ராகம கிரிக்கெட் கழகம்) 6 448 74.66 1 4
அஞ்செலோ பெரேரா (என்.சி.சி) 8 380 126.66 1 3
மஹேல உடவத்த (என்.சி.சி) 8 376 62.66 2 2
திமுத் கருணாரத்ன (எஸ்.எஸ்.சி) 8 366 61.00 1 3
ஷெஹான் ஜயசூரிய (சிலாபம் மேரியன்ஸ்) 6 351 70.20 1 1
தரங்க பரணவிதாரன (தமிழ் யூனியன்) 6 341 68.20 1 2
அதீஷ நாணயக்கார (ப்ளூம்பீல்ட் கழகம்) 4 320 80.00 2 1
ரொஷேன் சில்வா (ராகம கிரிக்கெட் கழகம்) 6 295 73.75 0 3
தனுஷ்க குணதிலக்க (எஸ்.எஸ்.சி) 3 250 125.00 1 2
  • பந்துவீச்சாளர்களில் சச்சித்ரவுக்கு முதலிடம்

இம்முறை உள்ளூர் கழக மட்ட ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை எஸ்.எஸ்.சி அணித்தலைவர் சச்சித்ர சேனநாயக்க பெற்றுக்கொண்டார். அவர் 8 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியின் போது .சி.சியின் விதிமுறைகளை மீறி பந்துவீசியதாக சச்சித்ர சேனநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.

எனினும், தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்துகொண்டு மீண்டும் அணிக்குள் இடம்பெற்றாலும், தொடர்ந்து அவரால் சிறப்பாக செயற்பட முடியாமல் போக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.

இந்நிலையில், எஸ்.எஸ்.சி அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்ற 33 வயதான சச்சித்ர சேனநாயக்க, இம்முறை உள்ளூர் கழக மட்ட ஒரு நாள் தொடரை அவ்வணிக்கு பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார். எனவே சச்சித்ர சேனநாயக்கவுக்கு இனிவரும் காலங்களில் தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றாலும், அவருக்கு அதிஷ்டம் கைகொடுத்தால் அவர் இலங்கை அணிக்காக விளையாடுவதில் தவறில்லை என்றே சொல்ல முடியும்.  

இதேநேரம், சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் பங்கேற்ற காரணத்தால் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தேசிய அணியில் விளையாடிய வீரர்கள் இடம்பெறாவிட்டாலும், இம்முறை உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரில் ஒருசில புதுமுக பந்துவீச்சாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

இதில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதவித் தலைவரும், வலதுகை சுழற்பந்துவீச்சாளரான மஹேஷ் பிரியதர்ஷன(36 வயது) மற்றும் எஸ்.எஸ்.சி அணிக்காக விளையாடி வருகின்ற ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 5 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுக்களுடன் 2ஆவது இடத்தையும், செரசன்ஸ் விளையாட்டு கழகத்தின் சதுர ரன்துனு 12 விக்கெட்டுக்களுடன் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேநேரம், சிலாபம் மேரியன்ஸ் கழகத்தின் அசித பெர்னாண்டோ, ராகம கிரிக்கெட் கழகத்தின் சஹன நானயக்கார மற்றும் இஷான் ஜயரத்ன ஆகியோர் தலா 11 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது?

விஞ்ஞானம் உலகுக்கு தந்த…

இதேநேரம், இறுதி நேரத்தில் இணைந்துகொண்ட என்.சி.சி அணியின் வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர, இறுதியாக நடைபெற்ற 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

எனினும், இம்முறை உள்ளூர் T-20 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கெண்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு உள்ளூர் ஒரு நாள் தொடரில் எதிர்பார்த்தளவு சோபிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்கள்

வீரர் போட்டிகள் ஓட்டங்கள் விக்கெட்டுக்கள்
சச்சித்ர சேனாநாயக்க (எஸ்.எஸ்.சி) 8 218 17
மஹேஷ் பிரியதர்ஷன (பொலிஸ் கழகம்) 5 237 14
ஜெப்ரி வெண்டர்சே(எஸ்.எஸ்.சி) 8 294 14
சதுர ரன்துனு (செரசன்ஸ் கழகம்) 6 241 12
அசித பெர்னாண்டோ(சிலாபம் மேரியன்ஸ்) 5 117 11
சஹன நானயக்கார (ராகம கிரிக்கெட் கழகம்) 6 198 11
இஷான் ஜயரத்ன (ராகம கிரிக்கெட் கழகம்) 6 225 11
துஷ்மன்த சமீர (என்.சி.சி) 4 133 10