ஒரு வருட போட்டித் தடைக்குப் பிறகு களமிறங்கும் மேற்கிந்திய தீவுகள் வீரர்

385

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான அன்ட்ரூ ரஸல் ஒரு வருட போட்டித் தடைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெண்டிஸ்; மிக வலுவான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்…….

அண்மைக்காலமாக உலகம் பூராகவும் நடைபெற்று வரும் T-20 லீக் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வந்த 29 வயதான அன்ட்ரூ ரஸலுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊக்கமருந்து பயன்படுத்தியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து அவருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உலக ஊக்கமருந்து தடுப்பு மையம், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கு அறிவித்தது.

இதன்படி, விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு அந்நாட்டு கிரிக்கெட் சபை அன்ட்ரூ ரஸலுக்கு பல தடவைகள் அழைப்பானை விடுத்தபோதிலும் அவர் அதை தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.

இந்நிலையில், உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் விதிமுறையை பின்பற்றாத குற்றச்சாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அன்ட்ரூ ரஸலுக்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஒரு வருட போட்டித்தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து, கடந்த வருடம் முழுவதும் சகலவித உள்ளூர் மற்றும் சர்வதேச T-20 போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார். எனினும், குறித்த தடை கடந்த மாதம் 30ஆம் திகதி நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கிரிக்கெட் அரங்கில் களமிறங்கவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகளில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான சுப்பர் – 50 ஒரு நாள் தொடரில் நாளை(03) நடைபெறவுள்ள லீவர்ட் இஸ்லேன்ட் அணிக்கெதிரான போட்டியில் ஜமைக்கா அணிக்காக விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

69 பந்துகளில் 18 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5ஆவது பங்களாதேஷ் பிரீமியர்….

இதேவேளை அன்ட்ரூ ரஸலின் திறமையை கருத்திற்கொண்டு, இம்முறை ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 8.5 கோடிக்கு (இந்திய ரூபாய்) மீள தக்கவைத்துக் கொண்டது. அதேநேரம், இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 போட்டித் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காகவும் அவர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதன்படி, உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுக்கொள்ளும் நோக்கில் கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோரை ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், பிராவோ, சுனில் நரைன், கிரென் பொல்லார்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அவ்வணி இணைத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், ஒரு வருட தடையின் பிறகு மேற்கிந்திய தீவுகள் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள அன்ட்ரூ ரஸலுக்கு, மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.