மூன்று வார ஓய்வுக்கு முகங்கொடுத்துள்ள பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா

139

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதன் காரணமாக மூன்று வாரங்கள் வரை பயிற்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று (19) உறுதிப்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் தமது முதல் சர்வதேச போட்டியாக, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்திய அணியில் மீண்டும் சவுரவ் கங்குலி?

இந்நிலையில் நேற்று (18) குஷ்தில் ஷா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இடது கை கட்டைவிரலில் உபாதை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட வேளையில் பரிசோதனை முடிவில் குறித்த இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் அவரால் மூன்று வாரங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளிலும், பயிற்சிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (17) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட பாகிஸ்தான் அணியின் குழாம் இரு அணிகளாக பிரிந்து விளையாடும் பயிற்சி போட்டியில் குஷ்தில் ஷா இடம்பெறவில்லை. 

இதேவேளை, அஸ்ஹர் அலி தலைமையிலான டீம் கிறீன்அணியும், பாபர் அஸாம் தலைமையிலான டீம் வைட்அணியும் மோதும் குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது பயிற்சி போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனவே குஷ்தில் ஷா மூன்று வார ஓய்வுக்கு முகங்கொடுத்துள்ளதன் காரணமாக குறித்த இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான தேர்வில் பங்கேற்கமாட்டார் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் குஷ்தில் ஷா அடுத்த வார இறுதியில் தனது பயிற்சிகளை ஆரம்பிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மருத்துவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் இங்கிலாந்து தொடருக்காக அங்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து தற்போது பயிற்சிகள் மற்றும் உள்ளக குழாம் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. 

3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தை வென்ற டி வில்லியர்ஸின் ஈகல்ஸ்

இரு அணிகளுக்குமிடையிலான முதல் தொடராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 5ஆம் திகதி மென்செஸ்டரில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டிக்கான அணித்தேர்விலும் குஷ்தில் ஷா பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

25 வயதுடைய இடதுகை துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா கடந்த வருடம் (2019) நவம்பரில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற T20i போட்டியில் முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். ஆனால் அதனை தொடர்ந்து குஷ்தில் ஷா இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<