திடீர் உபாதையினால் ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிடும் டில்ஷி

99th National Athletics Championship - 2021

220

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது கட்டம் இன்று (21) காலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இவ்வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான கடைசி தகுதிகாண் போட்டியாக நடைபெற்ற முதலாவது கட்டத்தில் ஆறு போட்டிகள் நடைபெற்றன.  

இதில் இம்முறை ஒலிம்பிக்கிற்கு தகுதியினைப் பெற்றுக்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்ஷி குமாரசிங்க, பெண்களுக்கான 800 மீற்றரில் பங்குகொண்டு போட்டியின் இடைநடுவில் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகினார். இதனால் அவரது ஒலிம்பிக் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமாகும் தேசிய மெய்வல்லுனர் போட்டி

குறித்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே டில்ஷி முன்னிலை பெற்றிருந்த போதிலும், இடைநடுவில் ஏற்பட்ட உபாதையினால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். 

இதனால், குறித்த போட்டியில் முதலிடத்தை முன்னாள் சம்பயினான நிமாலி லியனாஆராச்சி பெற்றுக்கொள்ள, இரண்டாவது இடத்தை கனிஷ் வீராங்கனை தருஷி கருணாரத்னவும், மூன்றாவது இடத்தை எம். குமாரியும் பெற்றுக்கொண்டனர்

இதில் சிறப்பம்சம் என்னவெனில் போட்டியை 2 நிமிடங்கள் 06.69 செக்கன்களில் நிறைவுசெய்த தருஷி, எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள உலக கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தகுதிபெற்றார்.

3,000 மீற்றர் தடைதாண்டல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதிசெய்துள்ள நிலானி ரத்னாயக்க, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3,000 மீற்ற்ர தடைதாண்டல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்

போட்டியை நிறைவுசெய்ய 9 நிமிடங்கள் 53.96 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார். இந்த வெற்றியின் மூலம் நிலானி ரத்னயாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்

100 மீற்றர்

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹிமாஷ ஷான் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 10.45 செக்கன்களில் நிறைவுசெய்தார். இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சஹன் ராஜபக்ஷவும் (10.69 செக்.), எம். யோதசிங்கவும் (10.76 செக்.) பெற்றுக்கொண்டனர்

இதனிடையே, பெண்களுக்கான 100 மீற்றரில் முதலிடத்தை அமாஷா டி சில்வா பெற்றுக்கொண்டார். 11.89 செக்கன்களில் அவர் போட்டியை நிறைவுசெய்தார்.

இதில் ஷெலிண்டா ஜென்சன் (12.20 செக்.) மற்றும் மெதானி ஜயமான்ன (12.21 செக்.) ஆகிய இருவரும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் தனதாக்கிக் கொண்டனர்.

400 மீற்றர்

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை காலிங்க குமார (46.12 செக்.) பெற்றுக்கொள்ள, இரண்டாவது இடத்தை அருண தர்ஷனவும், மூன்றாவது இடத்தை என். ராகருணாவும் பெற்றுக்கொண்டனர்.

அதேபோல, பெண்களுக்கான 400 மீற்றரில் முதலிடத்தை நடப்பு தேசிய சம்பியனான நடீஷா ராமநாயக்க பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 53.32 செக்கன்களில் நிறைவுசெய்தார்

நீளம் பாய்தல்

மற்றுமொரு ஒலிம்பிக் எதிர்பார்ப்பு போட்டிகளில் ஒன்றாக அமைந்த ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பிரசாத் விமலசிறி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 7.80 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்.

ஈட்டி எறிதல்

ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை முன்னாள் ஒலிம்பிக் வீரரான சுமேத ரணசிங்க பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 75.91 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

உயரம் பாய்தலில் தெற்காசிய சாதனையை முறியடித்தார் உஷான் திவங்க

இதனிடையே, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நடப்பு தேசிய சம்பியனான நதீகா லக்மாலி 48.55 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, டில்ஹானி லேகம்கே 52.88 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் தனதாக்கினார்

இதேவேளை, 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் எஞ்சிய போட்டிகளை கொரோனா பாதிப்பு குறைவடைந்த பிறகு நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<