தேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் ஆகஸ்ட்டில்

99th National Athletics Championship - 2021

123

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயாத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம், 10ஆம் திகதி கொழும்பில் சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியாக 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அத்தியாயம் கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.

குறிப்பாக நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தால் குறித்த தொடரில் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனிஷ்ட மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஜுலையில்

எதுஎவ்வாறாயினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது அத்தியாயத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜுலை மாதம் இரண்டாம் வாரமளவில் இதில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்ற வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது

இதுஇவ்வாறிருக்க, 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயாத்தில் நடைபெறவுள்ள இருபாலாருக்குமான போட்டிகள் பற்றிய விபரங்களையும் மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதில் ஆண்களுக்காக 200 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர், 110 மீட்டர் சட்டவேலி ஓட்டம், 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், 3000 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் பாய்தல், கோலூன்றிப் பாய்தல், முப்பாய்ச்சல், குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல், சம்மெட்டி எறிதல், 10 அம்சப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் மாத்திரம் நடைபெறவுள்ளது.  

பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை

அதேபோல, பெண்களுக்காக 200 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர், 100 மீட்டர் சட்டவேலி ஓட்டம், 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் பாய்தல், கோலூன்றிப் பாய்தல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல், சம்மெட்டி எறிதல், 7 அம்சப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் மாத்திரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…