96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் இவ்வாரம் கொழும்பில் ஆரம்பம்

165

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதன்படி, சுமார் 800 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ள இம்முறை போட்டித் தொடரில் இருபாலாருக்கும் 38 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற அனைத்து வீரர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனரில் மலையக வீரர் சண்முகேஸ்வரனுக்கு தங்கப் பதக்கம்

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் …

அத்துடன், இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் தெற்காசிய, ஆசிய மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராகவும் இது அமையவுள்ளதால், அனைத்து தேசிய மட்ட மெய்வல்லுனர் வீரர்களும் தமது தகுதியை நிரூபிப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வருடத்தின் மிகப் பிரதான மெய்வல்லுனர் போட்டித் தொடரான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கடந்த காலங்களைப் போல இவ்வருடமும் தேசிய மட்ட வீரர்களுடன், புதுமுக வீரர்களும் பங்குபற்றவுள்ளனர். அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 4 முக்கிய போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு வீரர்கள் தெரிவு இடம்பெறும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா, ஏப்ரல் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், ஆகஸ்ட்டில் கட்டாரில் மீண்டும் நடைபெறவு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றுக்கான தெரிவுப் போட்டியாகவும் இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் குறித்து ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஆசிய விளையாட்டு விழாவுக்கான மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள மெய்வல்லுனர் வீரர்களில் இருவரைத் தவிர மற்றைய அனைத்து வீரர்களும் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஆசிய விளையாட்டு விழாவுக்கு தெரிவாகிய வீரர்களின் திறமைகளை மேலும் அதிகரித்துக் கொள்ள இந்தப் போட்டித் தொடர் சிறந்த சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது.

எனினும், கென்யாவில் பயிற்சி பெற்றுவருகின்ற 800 மீற்றர் ஓட்டத்தின் தேசிய சம்பியன் இந்துனில் ஹேரத் மற்றும் அமெரிக்காவில் வசித்துவருகின்ற தேசிய அரைமரதன் சம்பியன் ஹிருனிகா விஜேரத்ன ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் 4X400 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் இலங்கைக்கு ஆசிய பதக்கமொன்றை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதால், கோல் மாற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு 2024 ஒலிம்பிக் வரை விஷேட கொடுப்பனவு

ஜப்பானின் கிபு நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய …

அத்துடன், ஆசிய விளையாட்டு விழாவுக்கான அஞ்சலோட்ட குழாத்தில் தலா ஆறு வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், ஐந்து வீரர்களை மாத்திரம் தேசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரின் பிறகு அறிவித்து ஆசிய விளையாட்டு விழாவுக்கு அனுப்புவதற்கு தேசிய மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில், இலங்கை 4X100 அஞ்சலோட்ட குழாத்தில் இடம்பெற்றிருந்த வினோஜ் சுரன்ஜய டி சில்வா டெங்குக் காய்ச்சலினாலும், இத்தாலியில் வசித்துவருகின்ற யுபுன் பிரியதர்ஷன காலில் ஏற்பட்ட எலும்பு முறிவினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, குறித்த வீரர்கள் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் அனுசரணை வழங்கவுள்ளது.