சகோதரர்கள் சமரின் முதல் நாளில் தர்ஸ்டன் கல்லூரி வலுவான நிலையில்

311

‘சகோதரர்களின் சமர்’ எனும் பெயர் மூலம் வர்ணிக்கப்படும் இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 55 ஆவது மாபெரும் வருடாந்த கிரிக்கெட் தொடர் ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச் சின்ன கேடயத்திற்காக நேற்று (23) கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது.  

மார்ச் முழுவதும் இடம்பெறவுள்ள பிரபல பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்களின் ஆரம்ப கட்டமாக இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டி, கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது. அத்துடன் இம்முறை போட்டித் தொடரில் போட்டித் தன்மையில் மாற்றமொன்றை ஏற்படுத்தி முடிவொன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முதல் தடவையாக ஒவ்வொரு அணிகளுக்கும் முதல் இன்னிங்சுக்காக தலா 60 ஓவர்கள் பந்துவீசுவதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

வீரர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் மகாஜனாக் கல்லூரி

அதுமாத்திரமின்றி இவ்விரு அணிகளினதும் தலைவர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவமிக்க வீரர்களாவர்.

இதன்படி, போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி கொண்ட இசிபதன கல்லூரியின் தலைவர் அயன சிறிவர்தன முதலில் தர்ஸ்டன் கல்லூரி அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியை, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் மூலம் ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரியினர் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இமேஷ் விரங்கவின் விக்கெட்டை காலிக் அமாத் பதம்பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து 14 ஓட்டங்களைப் பெற்றிருந்த யெஹான் விக்ரமதுங்க, சமில்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தர்ஸ்டன் கல்லூரி அணி 12 ஓவர்களில் 33 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.

இதன் மூலம் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட இசிபதன கல்லூரி, தமது முன்னணி பந்துவீச்சாளர்களின் துணையுடன் போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

எனினும், 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நிமேஷ் பெரேரா மற்றும் சஞ்சுல பிரபாஷ் ஆகியோர் 206 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று தர்ஸ்டன் அணிக்கு வலுச்சேர்த்தனர். எனினும், 106 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிமேஷ் பெரேரா, உபாதை காரணமாக தனது இன்னிங்சை நிறுத்திக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறினார்.

Photos: Thurstan College vs Isipathana College | 55th Battle of the Brothers – Day 1

மறுமுனையில், மத்திய வரிசையில் வலது கை துடுப்பாட்ட வீரர் ஜயவிஹான் பிரதீப்த சதம் விளாசி தர்ஸ்டன் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தினார். அத்துடன், தனது முதலாவது மாபெரும் கிரிக்கெட் சமரில் களமிறங்கிய ஜயவிஹான், அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய முதல் தர்ஸ்டன் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதனைத் தொடர்ந்து பின்வரிசையில் வந்த சவன் பிரபாஷ் (50) மற்றும் நிபுன் லக்‌ஷான் (38) ஆகியோர் இசிபதனவின் பந்துவீச்சிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்திருந்தனர்.

இதன்படி, 60 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தர்ஸ்டன் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த ஜயவிஹான் பிரதீப்த சதம் கடந்து ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களையும், நிமேஷ் பெரேரா (52) மற்றும் சவன் பிரபாஷ் (50) ஆகியோர் அரைச்சதங்களையும் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்திருந்தனர்.

பந்து வீச்சில், இசிபதன கல்லூரியின் காலிக் அமாத் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

காலிறுதிக்குள் நுழைந்தது பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி

பின்னர், தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இசிபதன கல்லூரி, நிதானமாக துடுப்பெடுத்தாடி நேர்த்தியான ஆரம்பத்தை கொடுத்திருந்த போதிலும் துரித கதியில் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை இழந்தது.

இதில், இசிபதன கல்லூரியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அனுபவமிக்க வீரர்களான அணித் தலைவர் அயன சிறிவர்தன மற்றும் சஞ்சுல அபேவிக்ரம ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அவ்வணியை சரிவிலிருந்து மீட்டனர். இறுதியில் இசிபதன கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 120 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகின்றது.

ஆடுகளத்தில் சஞ்சுல அபேவிக்ரம (45), அணித் தலைவர் அயன சிறிவர்தன (22) ஆகியோர் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

தர்ஸ்டன் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் நிபுன் லக்‌ஷான் 2 விக்கெட்டுகளையும் யெஷான் விக்ரமாராச்சி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாவதும் கடைசியுமான நாள் ஆட்டம் இன்று தொடரும் .