ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் தரூஷ, நேத்ரா சிறந்த வீரர்களாக முடிசூடல்

Sir John Tarbat Junior Athletics Championship 2022

114

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் 51ஆவது தடவையாகவும் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (30) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இதில் வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனராக வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் உயரம் பாய்தல் வீரர் தரூஷ அபிஷேகவும், பெண்களுக்கான அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனராக திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நீளம் பாய்தல் வீராங்கனை நேத்ரா சமாதியும் தெரிவாகினர்.

இதில் 15 வயதின் கீழ் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தரூஷ அபிஷேகவும், 13 வயதின் கீழ் பெண்களுக்கான நீளம் பாய்தலில் நேத்ரா சாமதியும் போட்டி சாதனைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், வருடத்தின் அதிசிறந்த ஆண்கள் பாடசாலைக்கான சம்பியன் பட்டத்தை 64 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியும், அதி சிறந்த பெண்கள் பாடசாலைக்கான விருதை 68 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் நிறுவனத்தின் அணுசரணையுடன் நடைபெற்ற இம்முறை போட்டிகளில் நாடாளவிய ரீதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இம்முறை சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 10 போட்டிச் சாதனைகளும். பெண்கள் பிரிவில் 6 போட்டிச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் ஒரு முந்தைய போட்டி சாதனை சமப்படுத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் போட்டிகளின் முதல் நாளில் 2 போட்டி சாதனைகளும், இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் 4 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம் 10 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதனிடையே, 12 வயதின் கீழ் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் முந்தைய போட்டி சாதனையை சமப்படுத்தி தங்கப் பதக்கம் வென்ற கண்டி திருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டி. ராஜபக்ஷ, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 12.5 செக்கன்களில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இம்முறை போட்டித் தொடரில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

அதேபோல, 13 வயதின் கீழ் ஆண்களுக்கான 70 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் (11.5 செக்.) மொறட்டுவை புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி மாணவன் அகின் குணதிலக்க புதிய போட்டி சாதனை படைத்தார்.

12 வயதின் கீழ் ஆண்களுக்கான 80 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.1 செக்கன்களில் நிறைவு செய்த கண்டி தர்மராஜ கல்லூரியைச் சேர்ந்த டி. ஹெட்டியாரச்சி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அதுமாத்திரமின்றி, இம்முறை சேர். ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரின் அஞ்சலோட்டத்தில் 6 புதிய போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<