யாரை நாளை இலங்கை டெஸ்ட் அணி களமிறக்கும்?

280

சுற்றுலா இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (03) ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இப்போட்டியில் விளையாடவிருக்கும் வீரர்கள் பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன கருத்து வெளியிட்டிருக்கின்றார். 

பல வீரர்கள் நீக்கம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு

அதன்படி, இன்று (02) நடைபெற்றிருந்த ஊடக சந்திப்பின் போது திமுத் கருணாரத்ன முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளான வீரர்களில் தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பதனை உறுதி செய்திருந்தார். 

இந்த வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கை அணி நாளைய டெஸ்ட் போட்டிக்காக வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீரவின் சேவையினை நாடவிருக்கின்றது.

அதேநேரம், விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மினோத் பானுக்க நாளைய போட்டி மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற லஹிரு திரிமான்னவும் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதில், லஹிரு திரிமான்ன மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

டெஸ்ட் அறிமுகம் பெறவிருக்கும் மினோத் பானுக்க 45 முதல்தரப் போட்டிகளில் விளையாடி இதுவரை 3500 இற்கு மேலான ஓட்டங்களை குவித்திருக்கின்றார். அதோடு, அவர் பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்தரப் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றின் போது 342 ஓட்டங்களைப் பெற்று, இலங்கை அணிக்காக உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவீரர்களில் ஒருவராகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், வனிந்து ஹஸரங்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தமது உடற்தகுதியினை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களும் நாளை நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என திமுத் கருணாரத்ன உறுதி செய்திருக்கின்றார். 

அதேவேளை தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரினை அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக நாடு திரும்பும் இலங்கை அணி தமது பயிற்சிக் குழாத்தில் ரொஷேன் சில்வா, அவிஷ்க பெர்னாந்து, லக்ஷான் சந்தகன், ரமேஸ் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் நுவன் ப்ரதீப் ஆகியோரை இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

விராட் கோலி, ஸ்மித் ஆகியோரினை பின்தள்ளிய கேன் வில்லியம்சன்

அதோடு வேகப்பந்தவீச்சாளர்களான கலன பெரேரா மற்றும் பினுர பெர்னாந்து ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது மேலதிக வீரர்களாக காணப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிப்பதோடு, இந்த டெஸ்ட் தொடரினை தக்கவைக்க இலங்கை அணி கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்து நாளை விளையாடுகின்றது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<