புதிய மைதானம் அமைப்பதற்கான திட்டம் இடைநிறுத்தம்!

1

இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் ஹோமாகமவில் அமைக்கப்படவிருந்த புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் உள்ளிட்டோருக்கு இடையில் இன்றைய தினம் (21) பிரதமர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

>> புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் நட்சத்திரங்கள்

ஹோமாகமவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களை முன்னாள் வீரர்கள் முன்வைத்திருந்தனர். குறிப்பாக, முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் தற்போதைய T20 அணியின் தலைவர் லசித் மாலிங்க ஆகியோரை அழைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதுதொடர்பான முடிவினை மேற்கொள்ளும் பொருட்டு, இந்த சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டிருந்தனர். 

குறித்த இந்த சந்திப்பின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், “இதுவொரு திறன்மிக்க சந்திப்பு. நாம் விரும்பும் கிரிக்கெட்டை வளப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய NewsWire  இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில், “இதுவொரு மிகச்சிறந்த கலந்துரையாடல். கிரிக்கெட் வீரர்களாகிய நாம் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதுடன், ஏனைய கிரிக்கெட் உட்கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இது. இது, பாரிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க வேண்டிய நேரம் இல்லை என பிரதமருக்கு தெரிவித்தோம்” என்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<