ILT20 தொடருக்கு இலங்கையில் இருந்து 12 வீரர்கள்

ILT20 2023

893

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண இண்டெர்நெசனல் T20 லீக் கிரிக்கெட் தொடருக்கு (ILT20) 12 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு அணிகள் மோதும் இந்தப் போட்டித் தொடர் ஜனவரி 13 முதல் பெப்ரவரி 12ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. மேலும், 34 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது டுபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

டுபாய் கெபிட்டல்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், டெசர்ட் வைப்பர்ஸ், MI எமிரேட்ஸ், ஷார்ஜா வொரியர்ஸ் மற்றும் கல்ஃப் ஜயண்ட்ஸ் ஆகிய ஆறு அணிகள் விளையாடும் இத்தொடரில் மூன்று அணிகள் மட்டுமே இலங்கை வீரர்களை தங்கள் அணிகளில் உள்வாங்கியுள்ளன.

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் உரிமையாளரான GMR SPORTS, டுபாய் கெபிட்டல்ஸ் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது. ஐந்து இலங்கை வீரர்களை அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பொலிவுட் நடிகர் ஷாருக்கான் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் நான்கு இலங்கை வீரர்களும், இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கழகமான மென்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமைத்துவத்தைக் கொண்டுள்ள Glazers குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனம் சார்பில் களமிறங்கும் டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் 3 இலங்கை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ILT20 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இலங்கை வீரர்களில், 19 வயதான இளம் சுழல் பந்துவீச்சாளரன ட்ரெவின் மெத்யூ அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசியின் 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ILT20 தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் 

டுபாய் கெபிட்டல்ஸ் – தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, இசுரு உதான, நிரோஷன் திக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன

அபுதாபி நைட் ரைடர்ஸ் – சரித் அசலங்க, லஹிரு குமார, தனஞ்சய டி சில்வா, ட்ரெவின் மெத்யூ

டெசர்ட் வைப்பர்ஸ் – வனிந்து ஹஸரங்க, தினேஷ் சந்திமால், மதீஷ பத்திரன

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<