குசல் மெண்டிஸின் வீசா சிக்கல் தொடர்பில் SLC விளக்கம்!

ICC Men’s T20 World Cup 2024

87

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விரைவில் அமெரிக்க வீசாவை பெற்றுக்கொள்வார் என கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் கடந்த 14ம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்பட்ட போதிலும், வீசா கிடைக்காத காரணத்தால் குசல் மெண்டிஸ் அணியுடன் பயணிக்கவில்லை. இவருடன் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அசித பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே ஆகியோரும் அணியுடன் பயணிக்கவில்லை. 

>> இலங்கை வரும் மே.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி!

இந்த நிலையில் குசல் மெண்டிஸின் வீசா சிக்கல் அடுத்துவரும் சில தினங்களில் சரிசெய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

குசல் மெண்டிஸின் வீசா நிராகரிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் தொடருகின்றன. அவருடைய தனிப்பட்ட விடயமொன்று தொடர்பிலான ஆவணங்களை அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது. இந்த ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அடுத்த இரண்டு நாட்களில் மெண்டிஸ் அவருடைய வீசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். 

குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குசல் மெண்டிஸ் சம்பந்தப்பட்டிருந்த விடயம் தொடர்பிலான ஆவனத்தை  அமெரிக்க தூதரகம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டுச்சென்று மோரிஸ்வில்லேயில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. அதேநேரம் உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்து இலங்கை அணி ஜூன் மூன்றாம் திகதி விளையாடுகிறது. 

இவ்வாறான நிலையில் குசல் மெண்டிஸால் பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் அணியுடன் இணைய முடியும் என அஷ்லி டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

>> T20 உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி போட்டி அட்டவணை வெளியீடு

“T20 உலகக்கிண்ணத்துக்கான அணிகள் இம்மாதம் 25ம் திகதி முதல் இணைந்துக்கொள்ள முடியும் என ஐசிசி அறிவித்துள்ளது. எனினும் அங்குள்ள காலநிலைக்கு வீரர்கள் தயாராகுவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அங்கு சென்றுள்ளோம். அதனால் தற்போது எந்த தாமதமும் இல்லை. எனவே குசல் மெண்டிஸ் இரண்டு பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் அணியுடன் இணைவார் என நம்புகிறேன்என மேலும் குறிப்பிட்டார். 

இலங்கை அணி எதிர்வரும் 28ம் திகதி முதல் பயிற்சிப்போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், 31ம் திகதி இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது 

T20 உலகக்கிண்ணத்துக்கான D குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியானது தென்னாபிரிக்கா, பங்காளதேஷ், நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<