மீண்டும் ஆரம்பமாகும் தங்கச் சமர்

103

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையே வணக்கத்திற்குரிய அருட்தந்தை T.M.F லோங் சவால் கிண்ணத்திற்காக (Battle of the Golds) இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட போட்டியானது 6 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் இவ்வருடம் முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. 

103 ஆவது வருடமாக இடம்பெறவுள்ள இந்த போட்டியானது இம்மாதம் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

2014 ஆம் ஆண்டில் ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்திற்கான ஒரு நாள் போட்டியின் போது இடம்பெற்ற துக்ககரமான மரணத்தினை அடுத்து குறித்த ஆண்டு முதல் இரு கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டிகளேதும் கடந்த ஆண்டு வரையில் இடம்பெற்றிருக்கவில்லை. இரு கல்லூரிகளிடையிலான நட்பினையும் பாரம்பரியத்தையும் தொடரும் வகையில் கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளை மீண்டும் ஆரம்பித்திருந்தனர். ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்திற்கான 27ஆவது மோதலாக அமைந்த குறித்த போட்டியில் பத்திரிசியார் கல்லூரி இலகு வெற்றி ஒன்றை  பதிவு செய்தது. 

இம்முறை ஒரு நாள் போட்டியானது மார்ச் மாதம் 7 ஆம் திகதி புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலாவது முறையாக இடம்பெறவிருக்கின்ற வணக்கத்துக்குரிய அருட்தந்தை GA பிரான்சிஸ் ஜோசப் சவால் கிண்ணத்திற்கான டி20 போட்டியும் அதே மைதானத்தில் 9 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. 

வணக்கத்திற்குரிய அருட்தந்தை T.M.F லோங் சவால் கிண்ணத்திற்காக இது வரையில் இடம்பெற்றுள்ள 102 மோதல்களில் 32 போட்டிகளில் பத்திரிசியார் கல்லூரியும், 16 போட்டிகளில் யாழ்ப்பாண கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளது. 30 போட்டிகள் சமநிலையில் நிறைவு பெற்றிருக்கின்றன. 

இறுதியாக 2013 இல் இடம்பெற்ற தங்கச் சமரில் யாழ்ப்பாண கல்லூரி நிமலேந்திரா தலைமையிலும், புனித பத்திரிசியார் கல்லூரி றிஷாந்த் ரியூடெரின் தலைமையிலும் பங்கெடுத்திருந்தன. குறித்த போட்டியானது சமநிலையில் நிறைவுக்கு வந்தது. அதற்கு முந்திய வருடம் கிளின்டன் தலைமையிலான புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியை தாமதாக்கியிருந்தது. யாழ்ப்பாண கல்லூரி  இறுதியாக 1973 ஆம் ஆண்டில் கணேசலிங்கம் அவர்களின் தலைமையிலேயே வெற்றி பெற்றது.

இம்முறை புனித பத்திரிசியார் கல்லூரி அணி ஐவன் ரொஸந்தனின் தலைமையில் கஸ்டோ, டிலக்சன், டனிசியஸ், டெஸ்வின் மற்றும் ரவிந்து ஆகிய நம்பிக்கைக்குரிய வீரர்களுடன் களம் காணவுள்ளது.   புனித பத்திரிசியார் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக அனுபவ பயிற்றுவிப்பாளர் சகாஜராஜா அவர்கள் செயற்படுகின்றார். 

மகாஜனாவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா?

வடமாகாணத்தின் கிரிக்கெட் விளையாடும் முக்கிய கல்லூரிகளான சுன்னாகம்…….

பெரும் சமரில் சிந்துஜனின் தலைமையில் களமிறங்கும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு பிரேந்திரா, கீதாவர்சன், கௌசிகன், விஷ்ணுகாந்த் மற்றும் நர்தனன் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வீரர்களாக திகழ்கின்றனர். யாழ்ப்பாண கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் யாழ் மத்திய கல்லூரி வீரர் செல்டன் செயற்பட்டுவருகின்றார். 

நூற்றாண்டு கடந்த பாரம்பரியமுடைய “தங்கச் சமர்” மீண்டும் ஆரம்பமாகுவது  இரு கல்லூரிகளின் பழைய மாணவர்களை மாத்திரமன்றி வடக்கின் கிரிக்கெட் ஆர்வலர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது . 

பெரும் சமர் இடம்பெறாத ஆண்டுகளில் இரு கல்லூரிகளினதும் கிரிக்கெட் தரம் வீழ்ச்சியடைந்திருந்தது அனைவரும் அறிந்ததே.

இப்போட்டி சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் ஸ்கோர் விபரங்களுக்கு thepapare.com இணையத்துடன் இணைந்திருங்கள். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<