எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கும் 117ஆவது வடக்கின் பெரும் சமர்!

117th Battle of the North 2024

122

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளிற்கிடையில் இடம்பெறும் “வடக்கின் பெரும் சமர்” என வர்ணிக்கப்படும் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது இம்மாதம் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் டயலொக் Axiata நிறுவனத்தின் அனுசரணையில்  யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

இன்றைய காலத்தில் இலங்கையின் தமிழ் பேசும் கிரிக்கெட் ரசிகர்களியே பரவலாக உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவிருக்கின்ற LPL, ILT20 தொடர்களில் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கின்ற விஐயகாந்த் வியாஸ்காந்த், அண்மையில் நிறைவிற்கு வந்த கழகங்களிற்கிடையிலான 50 ஓவர்கள் போட்டித்தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருது வென்ற மேர்பின் அபினாஷ் மற்றும் கடந்த வருடத்திற்குரிய 23 வயதிற்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் தீசன் விதுசன் ஆகியோர் இந்த வடக்கின் பெரும் சமரில் தமது பயணத்தினை ஆரம்பித்திருந்தனர். 

The Hundred வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

அண்மைக்காலமாகஇந்த தொடரில் பங்கெடுக்கின்ற இரு அணிகளும் தமது தரத்தினை வருடா வருடம் உயர்த்திக்கொள்வதனை அவதானிக்க முடிவதுடன், தனிப்பட்ட ரீதியில் வீர்ர்களது தரம் உயர்வதனையும் உணர முடிகின்றது. 

இம்முறை இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினுடைய ஒரு நாள் சுற்றுப்போட்டியில் பிரிவு இரண்டின் டியர் Bயின வெற்றியாளர்களான மத்திய கல்லூரி அணியினரும், மறுபக்கம் பிரிவு இரண்டின் டியர் A அரையிறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்த சென். ஜோன்ஸ் அணியினரும் களமாடக் காத்திருக்கின்றனர். இரு கல்லூரிகளும் பலமான அணிகளுடன் களங்காண காத்திருக்குன்றனர். 

யாழ். மத்திய கல்லூரி 

கடந்த காலங்களில் பிரிவு மூன்றில் ஆடிக்கொண்டிருந்த மத்திய கல்லூரி அணியினர் இம்முறை, முதல் முறையாக பிரிவு இரண்டிற்கு தரமுயர்த்தப்பட்டு ஆடிக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களிற்கு ஒரு புறம் சாதகமாகவிருக்க, கடந்த வருடம் பெரும் சமரில் சென். ஜோன்ஸிடமிருந்து கிண்ணத்தினை மீட்டது முதலாக தேசிய ரீதியில் அடுத்தடுத்து இரு தொடர்களில் சம்பியனாகியிருக்கின்றனர் என்பது அவர்களது வளர்ச்சியினை எடுத்துக்காட்டுவதுடன், அணியின் தொடர்ச்சியான சிறப்பு பெறுதிகளிற்கு சான்றாகவும் அமைகின்றது.  

இப் பருவகாலத்தில் மத்திய கல்லூரி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிசாந்தன் அஜய் தலைமையில் களமிறங்குகின்றனர். பருவகாலத்தில் ஒரு சதம் மற்றும் 10 அரைச்சதங்களினை அவர் ஏற்கனவே பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.அவரது துணையாக துடுப்பாட்ட வீரர் சயந்தன் செயற்படுகின்றார். கடந்த பருவ காலத்தில் தன்னை ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராக அடையாளப்படுத்தியிருந்த இவருடன், கடந்த வருட பெரும் சமரின் நாயகன் நியூட்டன் தற்போது ஒரு சிறந்த சலதுறை வீரராக தன்னை கட்டமைத்திருக்கின்றார். இவர்களை விடவும் மத்திய கல்லூரிக்கு பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் பருதி இணைந்திருக்கின்றார், இடது கை சுழற்பந்து வீச்சாளர் திசோன். இவர்களிற்கு மேலதிகமாக அணியின் விக்கெட் காப்பாளர் சிமில்டன், சகலதுறை ஆட்டக்காரர் அனுசாந்த் மத்திய வரிசை துடுப்பாட்டக்காரர் அபிலாஷ், அறிமுக வருடத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக எதிர்பார்க்கக்கூடிய சிந்துஜன் மற்றும் வேகப்பந்து வீசும் சகலதுறை ஆட்டக்காரரான கெவின் டெறிக்சன் ஆகியோர் மத்தியின் பக்கத்தில் எதிர்பார்க்க கூடிய வீரர்கள். பலமான மத்திய வரிசை துடுப்பாட்டம், இரு வேறு விதமாக பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்களான பருதி மற்றும் திசோன் இணையுடன் இணையும் வேகப்பந்து வீச்சாளர் நியூட்டன் அணியின் பலம்.

மத்திய கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளராக கடந்த வருடம் பெரும் சமரில் இலகு வெற்றியினை நெறிப்படுத்தியவரும், அதே வருடத்தில் பிரிவு மூன்றின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று அணியினை பிரிவு இரண்டிற்கு தரமுயர்த்துவதற்கு வழிநடத்தியவரும், அதன் தொடர்ச்சியாக இந்த பருவகாலத்தில் பிரிவு இரண்டின் டியர் B போட்டித்தொடரில் சம்பியனாவதற்கு அணியினை வழிநடத்தியவருமான குலேந்திரன் செல்டன் அவர்கள் செயற்படுகின்றார். 

யாழ். மத்திய கல்லூரி 

நிசாந்தன் அஜய், சகாதேவன் சயந்தன், ரஞ்சித்குமார் நியூட்டன், சதாகரன் சிமில்ட்டன், சுதர்சன் அனுசாந்த், தகுதாஸ் அபிலாஷ், சகாயஜெகன்் கெவின் டெறிக்சன், விக்னேஸ்வரன் பருதி, அருமைத்துரை சிந்துஜன், அன்ரனேசன் அபிஷேக், முரளி திசோன், ஜெகதீஸ்வரன் அஷ்விதன், கணேசலிங்கம் மதுசுதன், சுந்தரலிங்கம் றிலக்சன், பத்மகுமரன் நவிந்தன், ரஞ்சித்குமார் அக்‌ஷயன் 

  • பயிற்றுவிப்பாளர்குலேந்திரன் ஷெல்டன் 
  • பொறுப்பாசிரியர் – சுப்ரமணியன் உதயனன்
  • விளையாட்டுகளிற்கான பொறுப்பாசிரியர் – தேவசகாயம் றெக்னோ கிங்ஸ்லி  

பங்களாதேஷ் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்த அசித பெர்னாண்டோ

சென். ஜோன்ஸ் கல்லூரி 

சென். ஜோன்ஸினை பொறுத்தவரையில் சம காலத்தில் பிரிவு இரண்டின் (Tier-A) ஒரு நாள் போட்டித்தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தனர், துரதிஷ்ட வசமாக போட்டி மழை காரணமாக இடம்பெறாது போக புள்ளிகளடிப்படையில் சென். ஜோன்ஸ் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.கடந்த பருவகாலங்களினை விட இம்முறை சுற்றுத்தொடரில் அணி சிறந்த பெறுதியினை வெளிப்படுத்தியுள்ளது. 

ஐந்தாவது ஆண்டாக பெரும் சமர் அணியில் களமிறங்க காத்திருக்கின்ற எபனேசர், சச்சின் கணபதி, அஷ்னாத், கிறேம் ஸ்மித் மற்றும் கிந்துசன் ஆகியோர் சென். ஜோன்ஸின் அனுபவ வீரர்கள். மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் எபனேசர் தலைமையில் களமிறங்குகின்றனர் சென். ஜோன்ஸ். அணியின் உப தலைவர் சச்சின் கணபதி இந்த பருவ காலத்தில் இரு சதங்களினை அடித்துள்ள அணியின் பிரதான துடுப்பாட்ட வீரராக திகழ்கின்றார். 

சென். ஜோன்ஸின் பந்து வீச்சினை இடது கை சுழற் பந்துவீச்சாளர் அஷ்னாத் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கஜகர்ணன் வழிநடத்துகின்றனர். இவர்களிற்கு மேலதிகமாக சாம்சன் மற்றும் மாதுளன் ஆகியோர் பந்துவீச்சாளர்காக தமது பணியினை திறப்பட ஆற்ற வல்லவர்கள். 

விக்கெட் காப்பாளர் கிறேம் ஸ்மித் மற்றும் இரு துறைகளிலும் பங்களிக்கக்கூடிய சுழற் பந்து வீசும் சகல துறை வீரர்கள் கிந்துசன், ரன்டியோ மற்றும் வேகப்பந்து வீசக்கூடிய கவிசன் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்க்கின்றார்கள்.

அணியானது புதிய ஆரம்பத்துடுப்பாட்ட இணையொன்றினை இப்பருவகாலத்தில் களமிறக்கி வருகின்றது, அனுசாந்த் மற்றும் அபிஜோய்சாந்த் துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்கின்றனர். இவர்களிற்கு மேலதிகமாக அணிக்கு பலம் சேர்க்கசென். ஜோன்ஸ் அணியினை அனுபவம்மிக்க பயிற்றுவிப்பாளர் பத்மநாதன் லவேந்திரா வழிநடத்துகின்றார். இவர் 2011முதல் பற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இடைப்பட்ட காலத்தில் (2017-2018) இவர் மாவட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார். வடக்கில் முதல் அணியாக கல்லூரியின் சிரேஷ்ட அணியினை பிரிவு 3இலிருந்து பிரிவு 2 இற்கு தரமுயர்த்திய பெருமைக்குரிய பயிற்றுவிப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சென். ஜோன்ஸ் கல்லூரி 

நேசகுமார் எபனேசர் ஜெஷில், அண்டர்சன் சச்சின் கணபதி, ஜெயச்சந்திரன் அஷ்னாத், அருள்சீலன் கவிஷன், சங்கீத் கிரேம் ஸ்மித், மகேந்திரன் கிந்துசன், கிருபானந்தன் கஜகர்ணன், ராமன் அனுசாந்த், மேர்பின் ரண்டியோ, உதயனன் அபிஜோய்ஷாந்த், குகதாஸ் மாதுளன், விஜயராஜா சஞ்சய், சௌந்தர்ராஐன் ஆதர்ஷ், ஸ்ரான்லி ஜேசுநேசன் சாம்சன், டினேஷ்க் லறுன், உதயகுமார் ஜோன்ஷிகன், கோபாலகிருஷ்ணன் றோஜிதன், புஷ்பராசா யனுசன், சற்குணராஜா வினுக்‌ஷன் 

பயிற்றுவிப்பாளர்பத்மநாதன் லவேந்திரா

பொறுப்பாசிரியர் – கோபாலகிருஷ்ணன் கோபிகிருஷ்ணா

விளையாட்டுகளிற்கான பொறுப்பாசிரியர் – C. A. அரவிந்தன்

இரு அணிகளினதும் சமகாலப் பெறுதிகள் அடிப்படையிலும், இம்முறை குழாமினை அவதானிக்கையிலும் சமவலுவுடன் களம்காண்கின்றன என்பதில் மிகையில்லை. இரு கல்லூரிகளது ரசிகர்களும் பலத்த போட்டியொன்றினை ஏதிர்பார்க்கலாம். 

எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கவிருக்கும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 117வது வடக்கின் பெரும் சமரை டயலொக் தொலைக்காட்சியின் 127ம் இலக்க அலைவரிசை, ThePapare.com இணையத்தளம் மற்றும் டயலொக் VIU செயலி போன்றவற்றில் நேரடியாக பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<