The Hundred வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

The Hundred Draft 2024

100
The Hundred Draft 2024

இங்கிலாந்தில் நான்காவது தடவையாக நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவுக்கு இலங்கையைச் சேர்ந்த 10 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர்.

இதில் அண்மைக்காலமாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியாக வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடி வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த்தும் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் (ஆண்கள் மற்றும் பெண்கள்) வரைவுக்காக பதிவு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 389 வெளிநாட்டு வீரர்களும், 245 உள்ளூர் வீரர்களும் தமது பெயர்களை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 127 ஆகும். 122 உள்ளூர் வீரர்களும் பதிவு செய்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பதிவு செய்யப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கை 890 ஆகும்.

வெளிநாட்டு வீரர்களில், 7 வீரர்கள் அதிகபட்ச தொகையான 125,000 பவுண்டுகள் (இலங்கை பணப்பெறுமதியில் சுமார் 4.8 கோடி ரூபா) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸும் இடம்பெற்றுள்ளார்.

இந்தப் பிரிவில் மெதிவ்ஸ் தவிர, அவுஸ்திரேலியாவின் ஜோஷுவா இங்லிஸ், நியூசிலாந்தின் டெரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர், மேற்கிந்திய தீவுகளின் நிக்கொலஸ் பூராண், சுனில் நரைன் ஆகிய வீரர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவில் பினுர பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகிய இருவரும் 40,000 பவுண்டுகளுக்கான வீரர்கள் பிரிவில் பதிவுசெய்துள்ளனர்.

இவர்கள் தவிர, சதுரங்க டி சில்வா, துஷான் ஹேமந்த, திசர பெரேரா, பானுக ராஜபக்ஷ, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தங்களுக்கான இருப்பு தொகையை அறிவிக்காமல் பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை, பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான சமரி அத்தபத்துவும் இடம்பெற்றுள்ளார். அவர் 30,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 1.1 கோடி ரூபா) அடிப்படை மதிப்பு கொண்ட பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான தி ஹண்ட்ரட் வீரர்கள் வரைவு இம்மாதம் 20ஆம் திகதி  இங்கிலாந்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<