வெஸ்லி அணிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மைலோ ஜனாதிபதிக் கிண்ண றக்பி காலிறுதிப் போட்டியின் இரண்டாவது பகுதியில் அற்புதமாக விளையாடிய புனித ஜோசப் கல்லூரி அணி 43-29 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் மைலோ ஜனாதிபதிக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை புனித ஜோசப் அணி பெற்றுக்கொண்டது.

புனித ஜோசப் அணியின் புள்ளிகள் 6 ட்ரைகள், 5 கொன்வேர்ஷன்கள் மற்றும் ஒரு பெனால்டி வாயிலாகவும் வெஸ்லி அணியின் புள்ளிகள் 5 ட்ரைகள், 2 கொன்வேர்ஷன்கள் வாயிலாகவும் பெறப்பட்டன.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆரம்ப 30 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய வெஸ்லி அணி இடைவேளையின்போது 24 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

போட்டியின் 19வது நிமிடத்தில் வெஸ்லி வீரர் எம். எஸ். . பெர்னான்டோ அலாதியான ட்ரை ஒன்றை வைக்க அதற்கான மேலதிகப் புள்ளிகளை (கொன்வேர்ஷன்) அவிஷ்க லீ சிரமமின்றி பெற்றுக்கொடுத்தார்

4 நிமிடங்கள் கழித்து புனித ஜோசப் பதிலடி கொடுத்து புள்ளிகள் நிலையை சமப்படுத்தியது. புனித ஜோசப் வீரர் சத்துர செனவிரட்ன வைத்த ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை சச்சித் சில்வா பெற்றுக்கொடுக்க புள்ளிகள் நிலை 7 – 7 என சமநிலையானது.

இதனைத் தொடர்ந்து உத்வேகத்துடன் விளையாடிய வெஸ்லி அணி 2 நிமிட இடைவெளியில் இரண்டு ட்ரைகளை வைத்தது. 28வது நிமிடத்தில் ஜி. . ஹர்ஷனவும் 30வது நிமிடத்தில் அவன்த லீயும் ட்ரைகளை வைக்க ஒரு ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை அவிஷ்க லீ பெற்றுக்கொடுத்தார். இந் நிலையில் வெஸ்லி 19 – 7 என முன்னலை அடைந்தது.

இதனை அடுத்து விதிகளை மீறியமைக்காக புனித ஜோசப் வீரர் ஷெஹான் பெரேரா மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு உள்ளாகி 31வது நிமிடத்தில் சின்பின்னுக்கு அனுப்பப்பட்டார்.

எனினும் விடாமுயற்சியுடன் விளையாடிய புனித ஜோசப் அணி சார்பாக 4 நிமிடங்கள் கழித்து கெமுனு சேத்திய ட்ரை வைத்ததுடன் அதற்கான மேலதிகப் புள்ளிகளை சச்சித் சில்வா பெற்றுக்கொடுத்தார்.

39வது நிமிடத்தில் வெஸ்லி வீரர் அவன்த லீ ட்ரை வைத்த போதிலும் உபாதையீடு (இஞ்சறி டைம்) நேரத்தில் (41 நி.) புனித ஜோசப் சார்பாக கெமுனு சேத்திய தனது இரண்டாவது ட்ரையை வைத்ததுடன் அதற்கான மேலதிகப் புள்ளிகளை சச்சித் சில்வா பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதி : வெஸ்லி கல்லூரி 24  – 21 புனித ஜோசப் கல்லூரி

இடைவேளையின் பின்னர் 18 நிமிடங்கள் இரண்டு அணியினரினதும் புல்பேக்குகள் பந்தை அங்கும் இங்கும் உதைத்த வண்ணம் இருந்ததால் றக்பி போட்டி கால்பந்தாட்டம் போல் காட்சி அளித்தது.

எனினும் அதன் பின்னர் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்த ஆரம்பித்த புனித ஜோசப் அணியினர் சிறந்த பந்துப்பரிமாற்றங்களை செய்து புள்ளிகளைக் குவிக்கத் தொடங்கினர். மறுபுறத்தில் வெஸ்லி அணியினர் தவறுகளை இழைத்ததால் புள்ளிகள் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

புனித ஜோசப் சார்பாக 58வது நிமிடத்தில் கெமுனு சேத்திய தனது மூன்றாவது ட்ரையை வைத்தார். ஆனால் அடுத்த நிமிடமே மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சின்பின்னுக்கு அனுப்பப்பட்டார். ஐந்து நிமிடங்கள் கழித்து புனித ஜோசப் வீரர் வினுல் பெர்னாண்டோ வைத்த ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்த சத்துர செனவிரட்ன, மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து 30 மீற்றர் பெனால்டி ஒன்றையும் போட்டார்

இதனிடையே கெமுனு சேத்திய பந்துடன் ஓடி ட்ரை வைக்க முயற்சித்தபோது பந்து அவரது கையைவிட்டு வீழ்ந்ததால் மத்தியஸ்தர் அதனை ட்ரையாக அங்கீகரிக்கவில்லை.

71வது நிமிடத்தில் வெஸ்லி வீரர் எம். எம். சுபைர் ட்ரை வைத்து அணிக்கு சிறிதளவு ஆறுதலைக் கொடுத்தார். மேலும் 6 நிமிடங்கள் கழித்து கிஹான் பெரேரா ட்ரை வைக்க அதற்கான மேலதிகப் புள்ளிகளை சிரமமான கோணத்திலிருந்து சத்துர செனவிரட்ன பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் புனித ஜோசப் கல்லூரி அணி மேலதிக 14 புள்ளிகளால் வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம் : வெஸ்லி கல்லூரி 43 – 29 புனித ஜோசப் கல்லூரி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சத்துர செனவிரட்ன (புனித ஜோசப் கல்லூரி)