இலகுவாக காலிறுதிக்கு முன்னேறிய புனித தோமியர் கல்லூரி

117

கண்டி தர்மராஜ கல்லூரிக்கு எதிரான 17 வயதுக்கு உட்பட்ட பாடசலைகளுக்கு இடையிலான டிவிஷன் – 1 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் இந்தத் தொடரின் காலிறுதிக்கு முந்திய நொக் அவுட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புனித தோமியர் கல்லூரி தனது சொந்த மைதானத்தில் தர்மராஜ கல்லூரியை இன்று (21) சந்தித்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மராஜா கல்லூரி முக்கிய தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு வேகமாக ஓட்டங்களை பெறத் தவறியதால் சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல் போனது.

ரோயல் மற்றும் மஹிந்த கல்லூரிகள் காலிறுதிக்கு தகுதி

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜனித் குணதுங்க ஓட்டமின்றியே ஆட்டமிழக்க, மத்திய வரிசை வீரர்கள் ஓட்டங்களை அதிகரிக்க போராடியபோதும் அவர்களால் நல்ல ஆரம்பத்தை தொடர முடியவில்லை. குறிப்பாக மத்திய வரிசையில் அணித்தலைவர் துலாஜ் பண்டார 71 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றார்.

பின்வரிசையில் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தர்மராஜ கல்லூரி 49.2 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்போது புனித தோமியர் கல்லூரி சார்பில் அபாரமாக பந்து வீசிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஷமில்க விக்ரமதிலக்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனித தோமியர் அணி 29 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தபோதும் எந்த நெருக்கடியும் இன்றி 36.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

முதல் வரிசையில் வந்த ரவிந்து டி சில்வா 36 ஓட்டங்களை பெற்றதோடு, டியோன் பெர்னாண்டோவுடன் இணைந்து 51 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். புனித தோமியர் அணியின் வெற்றிவரை களத்தில் இருந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பெர்னாண்டோ 86 பந்துகளில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி, கண்டி – 148 (49.2) – துலாஜ் பண்டார 46, தனுக்க மாரசிங்க 21, இசுரு தயானந்த 20, ஷமில்க விக்ரமதிலக்க 4/26, கிஷான் முனசிங்க 2/18, உமயங்க சுவாரிஸ் 2/29

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை – 150/3 (36.3) – டியோன் பெர்னாண்டோ 51*, ரவிந்து டி சில்வா 36, டில்மின் ரத்னாயக்க 24, கிஷான் முனசிங்க 22*

முடிவு – புனித தோமியர் கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<