இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி   

665

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவு ஒன்று (டிவிஷன் l) கால்பந்து தொடரில், கொழும்பு ஸாஹிரா கல்லூரியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி, இவ்வருடத்திற்கான இந்தத் தொடரில் தமது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  

இதற்கு முன்னைய போட்டியில் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என ஸாஹிராக் கல்லூரியும், லும்பினி கல்லூரியுடனான ஆட்டத்தை 5-0 என புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் வெற்றி கொண்டிருந்தன. அதே போன்றே, இரு அணிகளும் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த மோதலில் களமிறங்கின.

10 வீரர்களுடன் ஹமீத் அல் ஹுசைனியை வீழ்த்தியது ஸாஹிரா கல்லூரி

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என்ற…

சொந்த மைதானத்தில்  இரசிகர்களின் பலத்த ஆதரவின் மத்தியில் களங்கண்டிருந்த புனித பத்திரிசியார் கல்லூரியின் முதலாவது முயற்சியாக ஹெய்ன்ஸ் உள்ளனுப்பிய பந்து நேரடியாக ஸாஹிரா கோல் காப்பாளர் ஷாகிரின் கைகளை அடைந்தது. அடுத்த நிமிடத்தில் பியன்வெனு உள்ளனுப்பிய பந்தினை ஷாகிர் சிறப்பாகத் தடுத்தார்.

ஸாஹிரா வீரர் மொஹமட் ஹம்மாத் தமது வாய்ப்பினை வீணடிக்க, மறு திசையில் போட்டியின் 7ஆவது நிமிடத்தில் மைதானத்தின் இடது பக்கத்தில் இருந்து அபிசன் கோலினை நோக்கி அனுப்பிய பந்தினை ஸாஹிராவின் பின்கள வீரர் அக்தார் தடுக்க முற்பட்டவேளை, அப்பந்து அவரின் உடம்பில் பட்டு, ஒவ்ன் கோலாக(Own goal) மாற, ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது பத்திரிசியார் கல்லூரி.

பின்னர் ஹிமாஷ், நஸூர்டீன் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டபோதும் பந்து நேரடியாக பத்திரிசியார் கோல் காப்பாளரின் கைகளில் சரணடைந்தது.

பந்தினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் ஸாஹிரா வீரர்களால் கோல் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ள முடியலவில்லை.

20ஆவது நிமிடத்தில் பத்திரிசியார் வீரர் ஹெய்ன்ஸ் உதைந்த ப்ரீ கிக், எதிரணியின் தடுப்பு வீரர்களில் பட்டு செல்ல, ரஜிகுமார் சாந்தன் அப்பந்தினை கோலாக மாற்றிய போதும், நடுவர் அதனை ஓவ்ப் சைட் கோல் என நிராகரித்தார்.

அதன் பின்னரும் சாந்தனுக்கு வாய்ப்புக்கள் கிடைத்த போதும் பந்தை அவர் கோலுக்கு வெளியே அனுப்பி ஏமாற்றினார்.

அதே போன்று பத்திரிசியார் அணிக்கு கிடைத்த வாய்ப்பின்போது, பியன்வெனு எடுத்துச்சென்ற பந்தினை லாவகமாக தடுத்தார் அக்தார்.

ஸாஹிராவிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை மொஹமட் ரஷீட் நேரடியாக கோலினை நோக்கி பந்தை அனுப்பினார்.  இருந்த போதும் கோல் காப்பாளரால் அது தடுக்கப்பட்டது.

ஹெய்ன்ஸ் எடுத்துச்சென்ற பந்தினை நோக்கி ஸாஹிரா கோல் காப்பாளர் முன் நகர்ந்து வந்தார். இதன்போது சாந்தனுக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் வீணடித்தார்.

இவ்வாறான தொடர் முயற்சிகள் வீணடிக்கப்பட, பத்திரிசியார் கல்லூரியின் முன்னிலையுடன் நிறைவிற்கு வந்தது முதற்பாதி.

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 0 ஸாஹிரா கல்லூரி

இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதலே பந்தினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸாஹிரா கல்லூரி அணியினர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தனர்.

ஹசன் ரசா உள்ளனுப்பிய பந்து கோல் காப்பாளரால் இலகுவாகத் தடுக்கப்பட்டது.

பின்னர் ஹம்மாட் கோலை நோக்கி உதைந்த பந்தினை தடுக்கும்போது கோல் காப்பாளர் தடுமாறிய வேளை, ரசா பந்தினைப்பெற முயற்சித்தபோதும் இறுதியில் கோல் காப்பாளர் பந்தினை சேகரித்தார்.

பேராயர் போன்ஜியன் ஞாபகார்த்த சவால் கிண்ணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு

இவ்வருடத்திற்கான பிரிவு I (டிவிஷன் I) பாடசாலைகள்…

நடுவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காக 45ஆவது நிமிடத்தில் சாந்தனும், தொடர்ந்து முறையற்ற ஆட்டத்திற்காக 46ஆவது நிமிடத்தில் பிறீசனும் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

ஸாஹிரா கல்லூரிக்கு கோலுக்காக அடுத்தடுத்து இரு வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்ற போதும், அவ்வணி வீரர்கள் அவற்றை மயிரிழையில் தவறவிட்டனர்.

போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் 63ஆவது நிமிடத்தில் லாவகமாக கோலினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு நேர்த்தியான உதையின்மூலம் மொஹமட் ரஷீட் போட்டியை சமநிலைப்படுத்தினார்.

ரஷீடின் கோலுடன் போட்டி மேலும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்தது.

தொடர்ந்து அணித் தலைவர் முர்ஷிடிற்கு கிடைத்த கோல் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஸாஹிராவிற்கு வெற்றியளிக்கவில்லை. மீண்டும் நஸுர்டீன் உள்ளனுப்பிய பந்தும் மயிரிழையில் கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது.

போட்டியின் இறுதி நிமிடத்தில் பத்திரிசியார் வீரர் கிறிஸ் ரீபன் பந்தினை கோலை நோக்கி எடுத்துச்செல்ல கோல் காப்பாளர் ஷாகிர் பந்தினை சேகரிப்பதற்காக முன்நகர்ந்தார். லாவகமாக பந்தினை கோல் காப்பாளரின் தலைக்கு மேலால் கோலினை நோக்கி அனுப்பி, இரண்டாம் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸாஹிரா கல்லூரியினை இறுதி நிமிட கோல் மூலம் வீழ்த்தியது புனித பத்திரிசியார் கல்லூரி.

இவ்வெற்றியானது பத்திரிசியார் கல்லூரிக்கு தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக அமைந்ததுடன் ஸாஹிரா கல்லூரிக்கு தொடரின் முதல் தோல்வியாகவும் அமைந்திருந்தது.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 2 – 1 ஸாஹிரா கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி – அக்தார் (ஒவ்ன் கோல்) 7′, கிறிஸ் ரீபன் 80′

ஸாஹிரா கல்லூரி – மொஹமட் ரஷீட் 63′

மஞ்சள் அட்டைகள்

புனித பத்திரிசியார் கல்லூரி – ரஜிகுமார் சாந்தன் 45′, பிறீசன் 46′

போட்டியின் நிறைவில் ThePapare.com இற்கு கருத்துத் தெரிவித்த ஸாஹிராக் கல்லூரி பொறுப்பாசிரியர் அருண் பிரசாத் “எமது வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடியிருந்தனர். மத்தியஸ்தர்கள் முறையற்ற ஆட்டங்களை சரியாக அவதானிக்கவில்லை. குறிப்பாக எறிகின்ற பந்து(Throw ball) கோல் காப்பாளரை நோக்கி நேரடியாக வழங்கப்பட முடியாது அவ்வாறு வழங்கினால் அது Hand ballஆக கருதப்பட வேண்டும். நடுவர்கள் நடுநிலைமை வகித்தால் போட்டி சிறப்பாக அமைய வழிவகுக்கும். நாங்கள் கடந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பான விளையாட்டின் மூலமாகவே வெற்றிபெற்றோம். இனிவரும் போட்டிகளிலும் வெற்றிபெறுவோம்” என்றார்.

டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள நிரோஷன் திக்வெல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய…

புனித பத்திரிசியார் கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் பேர்ட்ரி பன்னிஸ்டர் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் விறுவிறுப்பான போட்டியில் நாம் வெற்றிபெற்றிருக்கின்றோம்.  முதல் பாதியில் நாம் ஒரு கோலினைப் பெற்றிருந்தோம். இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய ஸாஹிரா வீரர்கள் ஒரு கோல் பெற்றனர். இறுதியில் நாம் மேலும் ஒரு கோல் பெற்று வெற்றிபெற்றோம்.

மனவேதனை என்னவென்றால் நாம் வெற்றிபெறும் சந்தர்ப்பங்களில் நடுவர்கள் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். நடுவர்கள் தவறெனின் நீங்களே நடுவர்களை அனுப்புங்கள், நாங்கள் போட்டிகளை நடாத்துகிறோம் என நான் இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கத்திடம் கேட்டிருந்தேன். இனிவரும் போட்டிகளிலும் எமது வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.