சாருஜ, ஆகில் மூலம் புனித அந்தோனியார் கல்லூரிக்கு இலகு வெற்றி

241

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதின் கீழ் பிரிவு 1 (டிவிசன் 1) கிரிக்கெட் போட்டித் தொடரில் பொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு எதிரான போட்டியில் சாருஜ ஏகநாயக்க மற்றும் முஹம்மத் ஆகில் ஆகியோரின் அபாரப் பந்து வீச்சு காரணமாக கண்டி புனித அந்தோனியார் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்துள்ளது.  

இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டி இன்று (13) பொலன்னறுவை ரஜரட்ட நவோதய மைதானத்தில் இடம்பெற்றது.  இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ரோயல் கல்லூரி அணி புனித அந்தோனியார் கல்லூரி அணியின் சிறப்பான சுழல் பந்து வீச்சுக் காரணமாக 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மிகச் சிறப்பாக பந்து வீசிய சாருஜ ஏகநாயக்க 11 ஓவர்கள் பந்து வீசி 9 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் முஹம்மத் ஆகில் 6 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இளைஞர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அதன்படி, ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமின்து மெண்டிஸ் இந்த அணிக்கு தலைமை வகிப்பதோடு புனித ஜோசப் …….

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக இந்துவர கலபதிகே 69 ஓட்டங்களையும் லஹிரு அபேசிங்ஹ 52 ஓட்டங்களையும் பந்து வீச்சில் சிறப்பித்த முஹம்மத் ஆகில் 26 ஓட்டங்களையும் மெத்திவ் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். துல்மின மெத்முத 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

161 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2வது இன்னிங்சினைத் தொடர்ந்த ரோயல் கல்லூரி அணி மீண்டும் சாருஜ மற்றும் ஆகில் ஆகியோரின் இருமுனை சூழலினை எதிர்கொள்ள முடியாமல் 49 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மீண்டுமொருமுறை சிறப்பாக பந்து வீசிய முஹமத் ஆகில் 13 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் சாருஜ ஏகநாயக்க 12 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 112 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி, பொலன்னறுவை (முதல் இன்னிங்ஸ்) – 42/10 (30.1)  சாருஜ ஏகநாயக்க 5/09, முஹம்மத் ஆகில் 3/02

புனித அந்தோனியார் கல்லூரி,கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 203/5 (25)  இந்துவர கலபதிகே 69, லஹிரு அபேசிங்ஹ 52, முஹம்மத் ஆகில் 26,  துல்மின மெத்முத 2/25

ரோயல் கல்லூரி, பொலன்னறுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 49/10 (25.5)  முஹமத் ஆகில் 4/15, சாருஜ ஏகநாயக்க 4/22

போட்டி முடிவு – புனித அந்தோனியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 112 ஓட்டங்களால் வெற்றி