சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – 1’ பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 2 போட்டி இன்று நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 3 போட்டிகள் இன்று ஆரம்பமாயின.

றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

கொழும்பு, றோயல் கல்லூரிக்கு எதிரான இடம்பெற்ற இந்தப் போட்டியில் இசிபதன கல்லூரி ஆதிக்கம் செலுத்தி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றபோதும் இந்த ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.

றோயல் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இரண்டு நாள் கொண்ட போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி 241 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

யுனிலிவர் லங்கா அணிக்கு அதிர்ச்சியளித்த மொபிடல் நிறுவனம்

பெயார் என்ட் லவ்லி மென்ஸ்…

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இசிபதன கல்லூரிக்கு லேஷான் அமரசிங்க அபாரமாக துடுப்பெடுத்தாடினார். இதன்மூலம் இசிபதன அணி 90 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை குவித்தது. அமரசிங்க ஒரு ஓட்டத்தால் பரிதாபமாக சதத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இசிபதன கல்லூரியால் முதல் இன்னிங்ஸில் 51 ஓட்டங்களால் முன்னிலை பெற முடிந்தது.  

இந்நிலையில் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த றோயல் கல்லூரி 85 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கடைசி நாள் ஆட்டநேரம் முடிவுற்றது.   

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 241/9d (77) – பசிந்து சூரியபண்டார 89, கவிந்து மதரசிங்க 52, அயன சிறிவர்தன 4/58

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 292 (90) –  லேஷான் அமரசிங்க 99, அயன சிறிவர்தன 48, காலிக் அமத் 30, சன்சுல பண்டா 25, மனுல பெரேரா 3/72, யுவீன் ஹேரத் 2/33

றோயல் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 85/7 (23) மைதர சல்துவ 20, லஹிரு டில்ஷான் 3/20

முடிவு: போட்டி சமநிலையில் முடிவுற்றது.


டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, மருதானை

சாலின்த செனவிரத்ன மற்றும் அஷேன் டேனியலின் அதிரடி பந்துவீச்சு மற்றும் ரெவான் கெல்லியின் அபார சதத்தின் உதவியோடு புனித ஜோசப் கல்லூரி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை இலகுவாக வீழ்த்தியது.

கொழும்பு, ப்ளும்பீல்ட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 186 ஓட்டங்களுக்கே சுருண்டது. இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி அணி 66  ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடை நிறுத்திக் கொண்டது.

முதல் நாள் ஆட்டத்தில் சதம் பெற்ற ரெவான் கெல்லி மொத்தம் 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விரங்க விக்ரமகே ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றார். டி.எஸ். சேனநாயக்க அணி சார்பில் மிதுஷன் குமார 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 72 ஓட்டங்களால் பின்தங்கிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸிலும் சோபிக்க தவறியது. அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 132 ஓட்டங்களுக்கே சுருண்டது. விஹான் குணசேகர அதிகபட்சம் 41 ஓட்டங்களை பெற்றார்.  

புனித ஜோசப் கல்லூரி சார்பில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்த சாலின்த செனவிரத்ன இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோன்று முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அஷேன் டேனியல் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.     

இந்நிலையில் புனித ஜோசப் கல்லூரி அணிக்கு 61 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவ்வணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 186 (50.4) – பசிந்து ஆதித்ய 41, தசுன் பெரேரா 41, சலிந்த செனவிரத்ன 5/45, அஷேன் டேனியல் 5/61

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 258/8 d (66) – ரெவான் கெல்லி 121, விரங்க விக்ரகே 46*, சச்சின்த ரவிந்து 38, மிதுஷன் குமார 4/54

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 132 (46) – விஹான் குணசேகர 41, உவின் பீரிஸ் 36, அஷேன் டேனியல் 4/46, சலின்த சேனவிரத்ன 4/32

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 61/3 (17.5)

முடிவு: புனித ஜோசப் கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி


தர்மராஜா கல்லூரி, கண்டி எதிர் குருகுல கல்லூரி, களனி

கண்டி தர்மராஜா கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான போட்டியில் களனி குருகுல கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – 1’ தொடரின் முதல் சுற்று குழு C போட்டியாகவே இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

எமது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இது – மகிழ்ச்சியின் உச்சத்தில் சந்திமால்

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மராஜா கல்லூரி அணி 147 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஒருவர் கூட 25 ஓட்டங்களை எட்டவில்லை. குருகுல அணிக்காக பந்து வீச்சில் நுவன் சானக்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த குருகுல கல்லூரி அணி ஆட்ட நேர முடிவில் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 23 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இதன்போது தர்மராஜா கல்லூரி சார்பில் ருக்மல் திசானாயக்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜா கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 147 (47.2) – யசின்த சமரரத்ன 24, நுவன் சானக்க 4/34, சச்சின்த சமித் 3/08

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்) – 170/6 (45) – பதும் மஹேஷ் 40*, ருக்மால் திசானாயக்க 5/38


 ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ  

மக்கொனை, சர்ரெய் வில்லேஜ் அரங்கில் இன்று ஆரம்பமான போட்டியில் ஜோசப் வாஸ் கல்லூரிக்கு எதிராக ரிச்மண்ட் அணி முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களை குவித்தது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ரிச்மண்ட் கல்லூரி ஆதித்ய சிறிவர்தன (66) மற்றும் தவீஷ அபிஷேக் (60) ஆகியோரின் அரைச்சதத்தின் மூலம் 245 ஓட்டங்களை பெற்றது. இதன்போது ஜோசப் வாஸ் அணி சார்பில் தினெத் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஜோசப் வாஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின்போது 27 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நாளை போட்டியின் கடைசி நாளாகும்.  

போட்டி சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 245 (69.5) – ஆதித்ய சிறிவர்தன 66,  தவீஷ அபிஷேக் 60, தினெத் பெர்னாண்டோ 4/63, கிறிஷான் அப்புஹாமி 3/60

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதல் இன்னிங்ஸ்) – 62/2 (27) – திலான் பிரதீப்த 38*, சதுரங்க பெர்னாண்டோ 20*


புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

காலி, சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமான போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஸ்திரமான நிலையில் உள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய புனித அலோசியஸ் கல்லூரி 145 ஓட்டங்களுக்கே சுருண்டது. தலுக்ஷ துல்மின பெற்ற 31 ஓட்டங்களுமே அதிகமாகும். சிறப்பாக பந்துவீசிய ரவின்து சுஹர்ஷன 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் நாளின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களுடன் ஸ்திரமாக உள்ளது. அந்த கல்லூரி சார்பில் ரொஷான் பெர்னாண்டோ 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டி சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 145 (63.3) – துலக்ஷ துல்மின 31, சதுர பிரபாத் 30*, ரவின்து சுஹர்ஷன 5/41

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 100/3 (28) – ரொஷான் பெர்னாண்டோ 51*