புனித பத்திரிசியாரை வீழ்த்தி இரண்டாவது முறையாக சம்பியனாகிய புனித ஜோசப்

327

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக 18 வயதின் கீழ்ப்பட்டோருக்கான பிரிவு ஒன்று பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் சம்பியனாக முடிசூடியது.  

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் இடம்பெற்றது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரியை வீழ்த்தி புனித ஜோசப் கல்லூரி அணியும், கொழும்பு புனித பேதுரு கல்லூரியை வீழ்த்தி யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் இறுதி மோதலுக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி ஆரம்பமாகி நான்காவது நிமிடம் புனித ஜோசப் வீரர் சமத் ரஷ்மித்த எதிரணியின் கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கோல் காப்பாளர் கிஜுமன் பிடித்தார்.

ஸாஹிராவை வீழ்த்திய புனித பேதுரு கல்லூரிக்கு பிரிவு ஒன்றில் மூன்றாம் இடம்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதின் கீழ்ப்பட்டோருக்கான பிரிவு ஒன்று பாடசாலைகளுக்கு .. .

 

10 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற புனித பத்திரிசியார் வீரர் ரஜிகுமார் சாந்தன் கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை புனித ஜோசப் கோல் காப்பாளர் மார்சல் கொடிகார பிடிக்கும்பொழுது பந்து கையில் இருந்து நழுவியது. எனினும் கோலுக்கு அண்மையில் வைத்து அவர் மீண்டும் பந்தைப் பிடித்தார்.

இதன்போது கோல் காப்பாளரிடமிருந்து வழங்கப்பட்ட பந்தை மத்திய களத்தில் இருந்த புனித ஜோசப் வீரர் சலன ப்ரமந்த பெற்று மைதானத்தில் இடதுபுற எல்லையினால் முன்னோக்கிச் சென்று எதிரணியின் கோல் திசைக்குள் பந்தைச் செலுத்தினார். அதனைப் பெற்ற புனித ஜோசப் வீரர் சமத் ரஷ்மித்த பந்தை கோலுக்குள் அழகாக செலுத்தி தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

பின்னர் 15ஆவது நிமிடத்தில் கிறிஸ்டீபன் உள்ளனுப்பிய பந்தை சாந்தன் கோலுக்குள் ஹெடர் செய்கையில் புனித ஜோசப் கோல் காப்பாளர் கொடிகார பிடித்துக்கொண்டார்.

மேலும் ஒரு நிமிடம் செல்வதற்குள் ஹைன்ஸ் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உயர்த்தி வேகமாக அடித்த பந்து கோல் காப்பாளரை விடவும் உயர்ந்து கோல் கம்பங்களுக்குள் செல்ல, போட்டி சமநிலையடைந்தது.

ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் கோலுக்கு எதிரே பெனால்டி பெட்டிக்கு சற்று வெளியே இருந்து அசேல மதுஷான் கோல் நோக்கி உதைந்த பந்து இடதுபுற கோல் கம்பத்தில் பட்டு வெளியே திசை திரும்பியது.

40 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து ஹைன்ஸ் சிறந்த முறையில் உள்ளனுப்பிய பந்தை நோக்கி கிறிஸ்டீபன் செல்வதற்குள் புனித ஜோசப் கோல் காப்பாளர் வேகமாக முன்னே நகர்ந்து பந்தை அங்கிருந்து வெளியேற்றினார்.

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 1 புனித ஜோசப் கல்லூரி

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்கள் முடிவதற்குள் ஜோசப் வீரர்கள் ஆட்டத்தில் மீண்டும் முன்னிலை பெற்றனர். மத்திய களத்தில் எதிரணி வீரர் பந்தைப் பெறுவதற்குள் அசேல மதுஷான் பந்தை எடுத்துவந்து யாழ் தரப்பினரின் பின்களத்தில் இருந்து பல வீரர்களையும் தாண்டி கோலுக்கு நேராக மைதானத்தின் நடுவே வந்து வேகமாக கோலுக்குள் பந்தைச் செலுத்த அது கோலாகியது.

இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனை எதிர்கொள்ளவுள்ள யாழ் பத்திரிசியார்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடாத்தும் 2017ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்று கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித…

 

ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கையில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் தலைவர் அபீஷன் எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் தாக்கியமைக்காக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் 65ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து உருட்டி வேகமாக வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தை எதிரணியின் பெனால்டி எல்லையில் இருந்து பெற்ற அசேல மதுஷான், பந்தைத் தடுப்பதற்கு வந்த கோல் காப்பாளரையும் ஏமாற்றி பந்தை எடுத்துச் சென்று தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

போட்டி நிறைவடைவதற்கு சில நிமிடங்களே இருக்கும்பொழுது புனித பத்திரிசியார் வீரர் ரஜிகுமார் சாந்தன் மற்றும் புனித ஜோசப் வீரர் சாலிந்த குரே ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டமையினால் இருவருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனால் யாழ் தரப்பினர் 9 வீரர்களுடனும், கொழும்பு தரப்பினர் 10 வீரர்களுடனும் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களை கொண்டு சென்றனர்.

எனினும் மேலதிக கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் வெற்றி பெற்று, தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்றனர்.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 3 புனித ஜோசப் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி ஹைன்ஸ் ஹமில்டன் 16’

புனித ஜோசப் கல்லூரி சமத் ரஷ்மித்த 10’, அசேல மதுஷான் 45’ & 65’

 

சிவப்பு அட்டைகள்

புனித பத்திரிசியார் கல்லூரி S. அபீஷன், சாந்தன்

புனித ஜோசப் கல்லூரி சாலிந்த குரே