உலக இளையோர் வலைப்பந்தாட்ட கிண்ண தொடருக்கான இலங்கைக் குழாம்

285
Netball World Youth

எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி, போட்ஸ்வானவின் கபோரோனில் ஆரம்பமாக உள்ள உலக இளையோர் வலைப்பந்தாட்ட கிண்ணத்துக்கான 21 பேர் கொண்ட இலங்கைக் குழாம் தற்பொழுது தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்த இலங்கை அணி, அண்மையில் நிறைவுற்ற 10ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட கிண்ணப் போட்டிகளில் தோல்வியுற்று நான்காவது இடத்தை பிடித்திருந்தமை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே, இவ்வணி உலக இளையோர் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆசிய இளையோர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததன் காரணமாகவே இலங்கை குழாம், குறித்த உலக இளையோர் கிண்ணப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. எனினும், ஆசிய கிண்ணப் போட்டிகளில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டதன் காரணமாக அதிருப்தி அடைந்த விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர ஆரம்பத்தில், உலக இளையோர் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியை பங்குபற்ற அனுமதிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

பின்னர், வலைப்பந்தாட்ட விளையாட்டு அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ள அதிகளவான நிதி மற்றும் உலகக் கிண்ண விதி முறைகளுக்கமைய குறித்த போட்டியில் பங்குபற்றவில்லையெனின் இலங்கைக்கு அபராதம் விதிக்கப்படும் என்பன பொன்ற விடயங்களை கருத்தில் கொண்டு அமைச்சர் அவரது தீர்மானத்தை மாற்றியமைத்தார்.

வலைப்பந்தாட்ட நிர்வாகிகளுடனான கலந்தாலோசனையின்  பின்னர் அணிக்கு பயிற்சி ஆலோசகர் ஒருவரும் இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹேசிந்த்  விஜேசிங்க பயிற்சி ஆலோசகராகவும், அமல்கா குணதிலக்க மற்றும் ஜானகி குணசேக்கர ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் சம்பியன் அணியான திருக்குடும்ப கன்னியர் கல்லூரிக்கு அமல்கா குணதிலக்க சில காலம் பயிற்சி அளித்திருந்த அதேவேளை, ஜானகி குணசேககர களுத்துறை திருக்குடும்ப கன்னியர் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

18 பேர் கொண்ட ஆசிய இளையோர் குழாமிலிருந்த 12 வீராங்கனைகள் மாத்திரமே, தற்போதைய 21 பேர் கொண்ட குழாமிற்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டனர். அதேநேரம், ஆச்சரியப்படும் வகையில், 9 பாடசாலை மாணவிகள் இந்த குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

நதீ பெர்னாண்டோ, சச்சினி ரொட்ரிகோ, ரஷ்மி தீவாஞ்சலி, நில்மி ஹப்புவாராச்சி, பூர்ணி லக்ஷனி, மந்திர சாரூனி சம்பத், கவீனா ராஜபக்ஷ, மல்ஷா சத்சரி, ஹாஷினி பெரேரா, நிலுஷா வர்ணகுல, இமேஷா நிர்மாணி மற்றும் ஹன்சிமா திஸ்ஸாநாயக்க ஆகியோர் தமக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டிகளின்போது காயமுற்றிருந்த ஹன்சிமா திஸ்ஸாநாயக்க மருத்துவ சான்றிதழ் பரிசீலனைக்குப் பின்னர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதேநேரம், ஆசிய இளையோர் கிண்ணப் போட்டிகளின்போது திறமைகளை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த விசாக்க கல்லூரியின் தருஷி இளங்கரத்ன 21 பேர் கொண்ட அணித்  தெரிவின்போது பங்குபற்றாமையினால் அணிக்கான இடத்தை தவறவிட்டார்.

பீமன்யா ரத்நாயக்க, நட்டாஷா அலுவிஹார, ரஷ்மி நிர்மாணி, அலோக்கா உதாரி திஸ்ஸாநாயக்க, டில்ஷானி கவிஷா, சுஷிமா குமாரி பண்டார, மெலோனி விஜேசிங்க, செத்மி தனோஷி மற்றும் கான்யா சேனாநாயக்க ஆகியோரே அணியில் புதிதாக இடம் பிடித்த வீராங்கனைகளாவர்.

மேலும், திருகுடும்ப கன்னியர் மடத்தை சேர்ந்த சுஷிமா குமாரி பண்டார, விசாக கல்லூரியின் மெலோனி விஜேசிங்க ஆகியோர் கடந்தாண்டு அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டிகளின்போது 18 வயதுக்குட்பட்ட பிரிவில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

சுஷிமா குமாரி 2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலை மட்ட போட்டிகளின் போது, 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதேநேரம், அகில இலங்கை 16 வயதுக்குட்பட்ட மைலோ வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளின்போது சிறந்த வீராங்கனையாகவும் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெரிவுசெய்யப்பட்டுள்ள குழாம் இன்னும் சில தினங்களில் பயிற்சிகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

உலக இளையோர் வலைப்பந்தாட்ட கிண்ணத்துக்கான 21 பேர் கொண்ட இலங்கை குழாம் :

பீமன்யா ரத்நாயக்க (மகளிர் கல்லூரி)
நட்டாஷா அலுவிஹார (ஹில்வுட் கல்லூரி, கண்டி)
ரஷ்மி தீவாஞ்சலி (பிரஸ்பிடெரியன் மகளிர் கல்லூரி, தெஹிவளை),
நில்மினி ஹப்புவாராச்சி (கடற்படை விளையாட்டுக் கழகம்),
பூரணி லக்ஷனி (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்),
மந்திரா சாரூனி (செலான் வங்கி)
ரஷ்மி நிர்மனி (CDB நிதி ஸ்தாபனம்),
கவீனா ராஜபக்ஷ (ஹில்வுட் கல்லூரி, கண்டி),
மல்ஷா ரத்நாயக்க (செலான் வங்கி),
சச்சினி ரொட்ரிகோ (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்),
ஹாஷினி பெரேரா (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்),
நதி பெர்னாண்டோ மற்றும் நிலுஷா வர்ணகுல (கடற்படை விளையாட்டுக் கழகம்),
அலோக்கா உதாரி திஸ்ஸநாயக்க (மகளிர் உயர்நிலை கல்லூரி, கண்டி),
டில்ஷானி கவிஷா (சேக்ரட் ஹார்ட் கொன்வென்ட், காலி),
சுஷிமா குமாரி பண்டார (திருக்குடும்ப மகளிர் கல்லூரி, குருநாகல்),
மெலோனி விஜேசிங்க (விசாக கல்லூரி),
செத்மி தனோஷி (திருக்குடும்ப மகளிர் கல்லூரி – குருநாகல்),
இமேஷா நிர்மணி (கடற்படை விளையாட்டுக் கழகம்),
கன்யா சேனநாயக்க (மகளிர் கல்லூரி,
ஹன்சிமா திஸ்ஸாநாயக்க (விமானப்படை விளையாட்டுக் கழகம்)