2016/2017 ஆண்டு பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் மேலும் இரண்டு போட்டிகளே எஞ்சியிருக்கும் நிலையில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகம் ஆகிய மூன்று அணிகளுக்கும் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு காணப்படுகின்றது.

கோல் வித்தியாசம் இறுதி தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் இல்லாத காரணத்தினால், போட்டிகளின் முடிவுகள் எவ்வகையில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளை தீர்மானிக்கும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம்.

POINTS-TABLE

ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்

சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாத ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் இவ்வருடம் மிகச் சிறந்த அணியாக காணப்படுகின்றது.

எனினும் எதிரணியான இராணுவ விளையாட்டுக் கழகம் தொடரின் முதல் கட்டத்தினை போலல்லாது கடந்த சில போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றமையினால், ப்ளூ ஸ்டார் அணி கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இப்போட்டியில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் அல்லது போட்டி சமநிலையில் நிறைவடையும் நிலையில், ப்ளூ ஸ்டார் அணியினால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போகும்.

ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை தக்கவைத்துக் கொள்ளலாம்.

எனினும் அடுத்து இடம்பெறும் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் ரினௌன் அணியை வீழ்த்தினால் அல்லது போட்டியை சமநிலையில் நிறைவு செய்தால் மாத்திரமே ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சம்பியன் பட்டம் உறுதியாகும்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ப்ளூ ஸ்டார் அணி 17 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் கொழும்பு மற்றும் ரினௌன் கழகங்கள் 16 அல்லது அதனை விட குறைந்த புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொள்ளும்.

Army SC v Blue Star SC| DCL16 | 4th March

கொழும்பு கால்பந்து கழகம்

சூப்பர் 8 சுற்றின் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி கொண்டு ஒரு போட்டியினை சமநிலையில் நிறைவு செய்த கொழும்பு கால்பந்து கழகம் சம்பியன் பட்டத்தினை வெல்லும் எதிர்பார்ப்புடன் இறுதி வாரத்திற்குள் பிரவேசிக்கின்றது.

முதல் போட்டியில் ப்ளூ ஸ்டார் அணி வெற்றியை சுவீகரிக்குமாயின், கொழும்பு கால்பந்து கழகத்தினால் சம்பியனாக முடிசூட இயலாது போகும். அதன் காரணமாக முதல் போட்டி கட்டாயமாக சமநிலையில் அல்லது இராணுவ அணியின் வெற்றியுடன் நிறைவு பெற வேண்டும்.

அவ்வாறு இடம்பெறுமாயின், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கொழும்பு கால்பந்து கழகத்தினால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். எனினும் சமநிலையான போட்டி முடிவின் மூலம் அவ்வணியினால் சம்பியன் பட்டத்திற்கு உரிமை கூறமுடியாது.

போட்டி முடிவுகள் இவ்வண்ணம் காணப்பட்டால், கொழும்பு கால்பந்து கழகம் 16 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ப்ளூ ஸ்டார், ரினௌன் அணிகள் 15 புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொள்ளும்.

Renown SC v Colombo FC| DCL16 | 4th March

ரினௌன் விளையாட்டுக் கழகம்

தற்போதைய புள்ளி அட்டவணையின்படி ரினௌன் விளையாட்டுக் கழகம் முதலிடத்தில் உள்ள போதிலும், இறுதி இரண்டு போட்டிகளின் முடிவினை பொறுத்தே அவ்வணியின் சம்பியன் வாய்ப்பு நிச்சயிக்கப்படும்.

முதல் போட்டியில் ப்ளூ ஸ்டார் அணி வெற்றி பெறுமாயின், இரண்டாவது போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி பெறுவது கட்டாயமாகும். எனினும் ப்ளூ ஸ்டார் அணி வெற்றி பெற தவறினால், ரினௌன் விளையாட்டுக் கழகம் தமது போட்டியை சமநிலையில் முடித்துக் கொள்வது சம்பியன் பட்டத்தினை வெல்ல போதுமானதாக காணப்படும்.

முதல் போட்டியின் முடிவினை பொறுத்து வெற்றியா அல்லது சமநிலையான முடிவா என்பதனை அவ்வணியினால் தீர்மானித்து அதற்கேற்ப தமது விளையாட்டுப் பாணியை மாற்றியமைத்துக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ரினௌன் விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை வெற்றி பெரும் பட்சத்தில், அவ்வணி 18 அல்லது 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ப்ளூ ஸ்டார் அணி 17 அல்லது 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் போட்டித் தொடரை நிறைவு செய்யும்.