அணுக போயகொடவின் இறுதி நிமிட ட்ரையின் மூலம், மருதானை ஸாஹிரா கல்லூரியின் ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகாக முறியடித்து 34-26 என்ற புள்ளிகள் அடிப்படையில் திரித்துவக் கல்லூரி சிங்கர் லீக் ரக்பி போட்டியை வென்றது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இவ்வருடம் A டிவிஷனுக்கு புதிதாக வருகை தந்த ஸாஹிரா கல்லூரியானது, பிரபல திரித்துவக் கல்லூரிக்கு விஷப் பரீட்சை கொடுத்தது. ஸாஹிரா கல்லூரியானது புதியதாக A டிவிஷனுக்கு வருகை தந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமையை வெளிக்காட்டி அசத்தியது.

திரித்துவக் கல்லூரியின் திலுக்ஸ தங்கே, வொரான் வீரகோனின் உதவியுடன் போட்டியின் முதலாவது ட்ரையை வைத்தார். லஷேன் விஜேசூரியவின் வெற்றிகரமான கொன்வெர்சன் உதையுடன் திரித்துவக் கல்லூரி 7-0 என முன்னிலை அடைந்தது. (திரித்துவக் கல்லூரி 7-0 ஸாஹிரா கல்லூரி)

அதற்கு பதிலடியாக, விரைவாக செயற்பட்ட ஸாஹிரா கல்லூரியானது அடுத்த நிமிடத்திலேயே செயிட் சிங்ஹவன்ச மூலமாக ட்ரை வைத்தது. பந்தை உதைத்து, துரத்திச் சென்று பந்தை பெற்றுக்கொண்ட சிங்ஹவன்ச ஸாஹிரா கல்லூரியின் சார்பாக முதலாவது ட்ரையை வைத்தார். பின்னர் அவரே கொன்வெர்சனை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய புள்ளி மீண்டும் சமநிலை அடைந்தது. (திரித்துவக் கல்லூரி 7 – 7 ஸாஹிரா கல்லூரி)

மீண்டும் ஒரு முறை சிறப்பாக செயற்பட்ட திலுக்ஸ தங்கே தமது அணிக்காக 2ஆவது ட்ரையை வைத்து அசத்தினார். இம்முறை லஷேன் விஜேசூரியவின் உதவியுடன் தங்கே ட்ரை வைத்தார். (திரித்துவக் கல்லூரி 12 – 7 ஸாஹிரா கல்லூரி)

சில நிமிடங்களின் பின்னர் ஸாஹிரா கல்லூரியின் வேக நட்சத்திரமான யுஸ்றான் லந்த்ரா திரித்துவக் கல்லூரி வீரர்களை தனது வேகத்தின் மூலமாக கடந்து சென்று ட்ரை வைத்து அசத்தினார். (திரித்துவக் கல்லூரி 12 -12 ஸாஹிரா கல்லூரி)

முதற் பாதி நிறைவடைய முன்னர் தமது பலத்தை வெளிப்படுத்திய திரித்துவக் கல்லூரியானது மேலும் 2 ட்ரை வைத்து 12 புள்ளிகள் முன்னிலையுடன் முதற் பாதியை முடித்துக்கொண்டது. திரித்துவக் கல்லூரி சார்பாக 3ஆவது ட்ரையை லஷேன் விஜேசூரிய வைத்தார். மேலும் சிறப்பாக விளையாடிய விஜேசூரிய மேலும் ஒரு ட்ரை வைக்க ஹசிறு வெளிவெட்டேவிற்கு உதவி செய்தார். (திரித்துவக் கல்லூரி 24 – 12 ஸாஹிரா கல்லூரி)

முதல் பாதி : திரித்துவக் கல்லூரி 24 – 12 ஸாஹிரா கல்லூரி

இரண்டாம் பாதியில் மழை கடுமையாக பொழிய, ஸாஹிரா கல்லூரியின் தலைவர் மொகமட் இர்பான் திரித்துவக் கல்லூரியின் தடையை தாண்டி ஓடி சென்று இரண்டாம் பாதியின் முதல் ட்ரையை வைத்தார். சிங்ஹவன்ச கொன்வெர்சனை தவறவிடவில்லை. (திரித்துவக் கல்லூரி 24 – 19 ஸாஹிரா கல்லூரி)

ஸாஹிரா கல்லூரியின் ஆட்ட நாயகன் செயிட் சிங்ஹவன்ச மீண்டும் ஒரு முறை ட்ரை கோட்டை கடந்து சென்று ஸாஹிரா அணியை முன்னிலைக்கு அழைத்து சென்றார். 5 மீட்டர் பெனால்டியிலிந்து பந்தை பெற்ற சிங்ஹவன்ச கம்பங்களின் அடியில் ட்ரை வைத்து பின்னர் கொன்வெர்சனை சிறப்பாக உதைத்து, ஸாஹிரா கல்லூரி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். இதன் மூலம் ஸாஹிரா கல்லூரி 2 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (திரித்துவக் கல்லூரி 24 – 26 ஸாஹிரா கல்லூரி)

அழுத்தம் தம்மை பிடித்துக்கொள்ள, புள்ளிகளை பெற போராடிய திரித்துவக் கல்லூரியானது 70ஆவது நிமிடத்தில் பலனை கண்டது. மீண்டும் ஒரு முறை தங்கே சிறப்பாக ஸாஹிரா வீரர்களை கடந்து சென்று கவ்ரவ பண்டாரவிற்கு பந்தை வழங்க, பண்டார மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். எனினும் கொன்வெர்சனை திரித்துவக் கல்லூரியினால் வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியவில்லை. (திரித்துவக் கல்லூரி 29 – 26 ஸாஹிரா கல்லூரி)

ஸாஹிரா கல்லூரி வெற்றிபெறுவதற்கு 3 புள்ளிகளே தேவை என்ற நிலையில், இறுதி 10 நிமிடமும் சூடு பிடித்தது. இரு அணிகளும் புள்ளிகளை பெற மாறி மாறி போராடிக்கொணட பொழுதிலும், இறுதியில் பலம் மிக்க திரித்துவக் கல்லூரி ஸாஹிரா கோட்டையை உடைத்து 78ஆவது நிமிடத்தில் ட்ரை வைத்து தமது வெற்றியை உறுதி செய்தது. அணுக போயகொட தனது  தனித் திறமையால் பந்தை சிறப்பாக எடுத்து சென்று ட்ரை வைத்து தமது கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார்.

இப்போட்டியானது இரு அணிகளுக்கும் கடுமையான போட்டியாக அமைந்தது. கடந்த போட்டிகளில் இலகுவாக வெற்றிபெற்ற திரித்துவக் கல்லூரிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை ஸாஹிரா கல்லூரி வெளிக்காட்டியது பாராட்டத்தக்கது.

ஸாஹிரா கல்லூரியை செயிட் சிங்ஹவன்ச தாங்கிய பொழுதும், திலுக்ஸ தங்கேவின் இரும்புக் கரங்களை தன் பக்கம் கொண்ட திரித்துவக் கல்லூரி வெற்றியை தமதாக்கியது.

ஸாஹிரா கல்லூரியானது இவ்வருட போட்டிகளில் சிறிய வித்தியாசத்தில் தோல்வியுற்றாலும், அனைத்து போட்டிகளிலும் சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டியது சிறப்பம்சமாகும்.

முழு நேரம் : திரித்துவக் கல்லூரி 34 – 26 ஸாஹிரா கல்லூரி

ThePapare போட்டியின் சிறந்த வீரர் – திலுக்ஸ தங்கே (திரித்துவக் கல்லூரி)

புள்ளிகள் பெற்றோர்

திரித்துவக் கல்லூரி

ட்ரை – திலுக்ஸ தங்கே 2, லஷேன் விஜேசூரிய, ஹசிறு வெலிவெட்ட, கவ்ரவ பண்டார, அணுக போயகொட

கொன்வெர்சன் – லஷேன் விஜேசூரிய 2

ஸாஹிரா கல்லூரி

ட்ரை – செயிட் சிங்ஹவன்ச 2 ,யுஸ்ரான் லந்த்ரா, மொகமட் இர்பான்

கொன்வெர்சன் – செயிட் சிங்ஹவன்ச 3