இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

1091

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதன்படி, இம்முறை தேர்தலில் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அதே தரப்பினர் களமிறங்கவுள்ளதாகவும் இதன் போது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”நான் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளேன். கடந்த 2 வருடங்களில் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். உள்ளுர் மட்டத்தில் கழகங்களுக்கான அனைத்து வசதிகளையும் நிவர்த்தி செய்து கொடுத்துள்ளோம். எனவே எதிர்வரும் காலங்களிலும் இதேபோன்று இன்னும் பல சேவைகளை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டது. இதில் அர்ஜுன ரணதுங்க தரப்பை எதிர்கொண்ட திலங்க சுமதிபால தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றனர். அதிலும் குறிப்பாக உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜுன ரணதுங்கவுக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகித்த திலங்க சுமதிபால உள்ளிட்ட தரப்பினரின் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் இடம்பெறுவதற்கான ஆயத்தங்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி, எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எனவே இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வரும் நிர்வாக சபையினர் புதிய விளையாட்டு சட்டத்தின்படி எதிர்வரும் 4 வருடங்களுக்கு பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவை களமிறக்குவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக ஒன்றிணைந்த குழுவொன்றை முன் நிறுத்தி அர்ஜுன ரணதுங்கவை வெற்றியடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபையினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்த கருத்து குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில்,

”முன்னாள் இடைக்காலத் தலைவர்கள் அவ்வாறு கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அவருக்கு அவ்வாறு சொல்வதற்கு அதிகாரம் உண்டு .நாங்கள் அதற்கு தடை செய்யப் போவதில்லை. அதேபோன்று தேர்தலின் மூலம் என்னை தலைவராக தெரிவாவதை யாராலும் தடுப்பதற்கு நான் இடமளிக்கப் போவதும் இல்லை. எனவே இந்நாட்டின் பிரஜையாக நானும் இத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றிபெறுவேன்.

ஆனால் ஒரு விடயத்தை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். 2019 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். எனவே எமது இந்த முயற்சிக்கு அனைவரும் உதவி செய்யுங்கள். உலகக் கிண்ணத்திற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எமது பயணத்துக்கு எவரும் தடையாக இருக்க வேண்டாம்” என்றார்.

”இதேநேரம், எமது வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எமது துடுப்பாட்டம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைகின்றது. சந்திக ஹத்துருசிங்கவுடன் நல்லதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே ஒரு வருடம் மாத்திரம் எம்மை சுதந்திரமாக செயற்பட விடுங்கள். நிச்சயம் எமது வீரர்கள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு” என மேலும் அவர் தெரிவித்தார்.

லங்கன் பிரீமியர் லீக் தொடரின் அவசியத்தை விளக்கும் ரசல் ஆர்னோல்ட்

முன்னதாக 2004 ஆம் ஆண்டு திலங்க சுமதிபாலவின் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகத்தை அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரினால் அதிரடியாக கலைக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகமானது கடந்த 8 வருடங்களாக இடைக்கால நிர்வாக சபையின் கீழ் செயற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஐ.சி.சியின் கூட்டத் தொடர்களில் இலங்கைக்கு நிரந்தர உறுப்புரிமை கிடைக்காது போனதுடன், வெறும் பார்வையாளராகவே பங்கேற்று வந்தது. அது மாத்திரமின்றி ஐ.சி.சியின் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ அல்லது உறுப்பினராக செயற்படவோ இலங்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து, முறைப்படியான தேர்தல்கள் மூலம் அனைத்து நாடுகளும் தமது நிர்வாகிகளை தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே நிதி உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர பொறுப்பேற்றவுடன் இடைக்கால நிர்வாக சபையை கலைத்துவிட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.