வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து தொடரின் பலம் மிக்க அணிகளைக் கொண்ட 20 வயதின் கீழ் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்திய பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது.

அதற்கு முன்னர் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியினர் மன்னார் முருங்கன் கல்லூரி அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

அதேபோன்று, இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மன்னார் சென் சேவியர் கல்லூரி வீரர்கள் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியினரை 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியிருந்தனர்.  

தொடரின் இறுதி ஆட்டமானது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள்

இந்த ஆட்டத்தின் முதல் சில நிமிடங்கள் சற்று மந்த நிலையில் சென்றுகொண்டிருந்தது. எனினும், ஆட்டத்தின் இடையில் சென் சேவியர் அணியின் தண்டப் பரப்பினுள் அவ்வணியின் பின்கள வீரர் ஒருவரின் கையில் பந்து பட்டமையினால் ஹென்ரியரசர் அணிக்கு தண்ட உதைக்கான (பெனால்டி) சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது அவ்வணியின் முன்கள வீரர் அமலதாஸ் மதுஸ்சன் மிக லாபகமாக முதல் கோலைப் பெற்றார்.

முதல் கோலின் பின்னர் ஆட்டம் சூடு பிடித்தது. ஆட்டதின் வேகம் குறையாமல் நடைபெற்றுக்கொண்டிருக்க, முதல் கோலைப் பெற்ற மதுஸ்சன் நீண்ட தூரத்த்தில் இருந்து ஒரு அசத்தல் கோலை போட்டு அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.  

 சம்பியன் பட்டம் வென்ற புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி
சம்பியன் பட்டம் வென்ற புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி

இருந்தும் மனம் தளராத மன்னார் சென் சேவியர் அணி வீரர்கள், தமது அணிக்கான முதல் கோலைப் பெறுவதற்கு எத்தனித்துக்கொண்டே இருந்தனர். எனினும் அவர்களது முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

முதல் பாதி: புனித ஹென்ரியரசர் கல்லூரி 2 – 0 சென் சேவியர் கல்லூரி

இரண்டாவது பாதியாட்டதில் முதல் பாதியை விட மன்னார் சென் சேவியர் அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. அவர்கள் தமது முதல் கோலுக்காக பல முறை முயற்சி செய்தும் அவை எதுவுமே பலன் அளிக்கவில்லை.

எனினும், மறுமுனையில் ஆட்ட இடையில் புனித ஹென்ரியரசர் அணியின் மற்றொரு வீரரான அன்டனி ராஜ் அணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.  அவரது கோலின் மூலம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியின் வெற்றி உறுதியானது.

எனவே, 2015ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான ”கொத்மலே கிண்ண” சம்பியன்களான புனித ஹென்ரியரசர் கல்லூரி, இந்த ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வட மாகாண சம்பியன்களாக முடிசூடினர்.

முழு நேரம்: புனித ஹென்ரியரசர் கல்லூரி 3 – 0 சென் சேவியர் கல்லூரி  

20 வயதின் கீழ் பிரிவு போட்டிகளின் புகைப்படங்கள்


மூன்றாம் இடத்திற்கான போட்டி

அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் மற்றும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகிய அணிகள் இப்போட்டியில் மோதியிருந்தன. ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதும், முதற் பாதியிலேயே இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றனர் முருங்கன் மகா வித்தியாலய அணியினர்.  

முதல் பாதி: மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் 2 – 0 பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி

மீண்டும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே மேலும் ஒரு கோலை பெற்றனர் முருங்கன் மகா வித்தியாலய அணியினர்.

இரண்டாம் இடம் பெற்ற மன்னார் சென் சேவியர் கல்லூரி அணி
இரண்டாம் இடம் பெற்ற மன்னார் சென் சேவியர் கல்லூரி அணி

அதன் பின்னர் ஆட்டத்தை வேகப்படுத்திய ஹாட்லி கல்லூரி அணியினருக்கு ததீசன் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். அவரது கோலுடன் உட்சாகமடைந்த அவ்வணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதன் பலனாக, உதயசாந் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட, ஆட்டநேர நிறைவில் இரு அணிகளும் தலா 3 கோல்களினால் சமநிலை பெற்றது.

முழு நேரம்: மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் 3 – 3 பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி

இதன் காரணமாக, சமநிலை தவிர்ப்பு (பெனால்டி) உதையில் 5-4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினை தமதாக்கியது மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம்.

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க