இன்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் இரண்டாவது நாளிலேயே வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

பந்து வீச்சாளர்கள் அபாரம் : மூன்று நாட்களும் நீடிக்குமா வடக்கின் பெரும் சமர்?

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 111 ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி இன்று..

நேற்றைய தினம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் சொந்த மைதான அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென் ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் ஜெனி பிளமின் தெரிவித்திருந்தார்.

அதன்படி அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் அணி நேற்றைய நாள் ஆட்ட நேர நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தனர்.

பின்னர் இன்றைய நாள் ஆட்டத்தில் யதுசனுடனான அரைச்சத இணைப்பாட்டத்தின் பின் அணித்தலைவர் ஜெனி பிளமிங் 37 ஓட்டங்களுடனும், தொடர்ந்து கபில்ராஜ் (16), அபினாஷ்(06), மற்றும் லியோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்திருந்த யதுசன் 70 ஓட்டங்களுடன் மைதானம் விட்டு வெளியேற, நிறொசன் ஒரு ஓட்டத்துடனிருக்க, சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ் மத்தியை விட 89 ஓட்டங்கள் முன்னிலையில் 253 எனும் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

யாழ் மத்தியின் சார்பில் பந்து வீச்சில் தசோபன் 4 விக்கெட்டுகளையும், துசாந்தன், மதுசன் ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற நிக்சன், கார்த்தீபன் ஆகியோரும் தம் பங்கிற்கு ஒரு விக்கெட்டை சாய்த்திருந்தனர்.

மத்திய கல்லூரியின் இரண்டாவது இன்னிங்சிற்கு பிரியலக்சன், ஜெயதர்சன் இணை நிலைத்திருந்த போது பிரியலக்சன்(12), கௌதமன்(02), நிக்சன்(0), ஜெரோசன்(11), கார்த்தீபன்(08), சஜீபன்(02) ஆகியோரை கபில்ராஜ் மிக வேகமாக மைதானம் விட்டு அனுப்ப போட்டி சென் ஜோன்ஸின் பக்கம் முழுவதுமாகச் சாய்ந்தது.

மறு முனையில் நிலைத்திருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெயதர்சன் 09 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தசோபன்(06), கோமேதகன்(05) ஆகியோரது விக்கெட்டும் அடுத்தடுத்து பறிபோனது. இறுதித் துடுப்பாட்ட வீரர் துசாந்தன் ஆட்டமிழக்காதிருக்க இரண்டாவது இன்னிங்ஸில் மத்திக்கு அதிக ஓட்டங்களை சேகரித்த மதுசன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு, 82 ஓட்டங்களுக்குள் சுருண்டது மத்திய கல்லூரி.

இதன் காரணமாக இந்த பெரும் சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பந்து வீச்சை நோக்குகையில் கபில்ராஜ் 6 விக்கெட்டுகளையும், யதுசன், அபினாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் கபில்ராஜ் சரித்த பத்து விக்கெட்டுகள், யதுசனின் சகலதுறை ஆட்டம், அபினாஷின் இறுதி நேரப் பந்து வீச்சு ஆகியவற்றோடு இணைந்த ஜெனி பிளமிங்கின் களத்தடுப்பு மற்றும் அணித்தலைமை ஆகியன துணை நிற்க 27 (1990) வருடங்களின் பின் வடக்கின் பெரும் போரில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கின்றது சென். ஜோன்ஸ் கல்லூரி.

பருவகாலத்தில் எந்தவொரு தோல்வியையும் சந்தித்திருக்காத மத்திய கல்லூரி தமது முதல் தோல்வியை இன்று சந்தித்திருந்தனர். இதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது அவர்களது மோசமான துடுப்பாட்டம். அவர்கள் மிண்டெழுந்து ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள் .

111ஆவது வடக்கின் பெரும் சமரின் விருதுகள்

ஆட்ட நாயகன் – கபில்ராஜ் ( சென் ஜோன்ஸ்)
சிறந்த துடுப்பாட்ட வீரர் – யதுசன் ( சென் ஜோன்ஸ்)
சிறந்த பந்து வீச்சாளர் – கபில்ராஜ் ( சென் ஜோன்ஸ்)
சிறந்த சகலதுறை வீரர் – தசோபன் ( யாழ் மத்தி)
சிறந்த களத்தடுப்பாளர் – ஜெனி பிளமின்( சென் ஜோன்ஸ்)
சிறந்த விக்கெட் காப்பாளர் – தேவபிரசாத் ( சென் ஜோன்ஸ்)

எதிர்வரும் சனிக்கிழமை (18.03.2016) இடம்பெறவிருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டி தொடர்பான விபரங்களை அறிந்துகொள்வதற்கும் நீங்கள் Thepapare.com உடன் இணைந்திருங்கள்.