இலங்கை அணியை டெஸ்டிலும் வீழ்த்தி சாதனை படைக்குமா ஜிம்பாப்வே?

691
SriLanka vs Zimbabwe

சிக்கந்தர் ராசாவின் கன்னிச் சதம் மற்றும் ஜிம்பாப்வே அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் ஓட்ட பங்களிப்பு என்பவற்றினால் இலங்கை வீரர்கள் வெற்றிக்காக இறுதி நாளில் 7 விக்கெட்டுக்கள் மீதமிருக்க மேலும் 218 ஓட்டங்களை பெற வேண்டி உள்ளது.

ஜிம்பாப்வே அணியை மீட்ட சிக்கந்தர் ராசா

நேற்றைய தினம் 145 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இணைந்து கொண்ட ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் மல்கம் வால்லர் ஆகியோர் 7வது விக்கெட்டுக்காக பெறுமதி மிக்க 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஜிம்பாப்வே அணியின் ஓட்ட எண்ணிக்கையை 289 ஓட்டங்கள் வரை உயர்த்தியிருந்தனர்.   

இன்றைய தினம் 97 ஓட்டங்களுடன் களமிறங்கி, தொடர்ந்து துடுப்பாடிய சிக்கந்தர் ராசா இன்றைய தினம் வீசப்பட்ட முதலாவது ஒவேரிலேயே மூன்று ஓட்டங்களை பெற்று தனது கன்னிச் சதத்தினை பதிவு செய்தார். இந்நிலையில்,98 பந்துகளை எதிர்கொண்ட மல்கம் வல்லர் 8 பௌண்டரிகள் உட்பட 68 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், டில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் உபுல் தரங்கவிடம் பிடி கொடுத்து களத்திலிருந்து வெளியேறினார்.

அதனையடுத்து சிக்கந்தர் ராசாவுடன் இணைந்து கொண்ட ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம் கிரிமர் எட்டாவது விக்கெட்டுக்காக 17 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிஸ்சர் உள்ளடங்கலாக 127 ஓட்டங்களைப் பெற்றிருந்த சிக்கந்தர் ராசா,  ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில், நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அதேநேரம், சிக்கந்தர் ராசாவின் விக்கெட்டினை கைப்பற்றியதன் ஊடாக டெஸ்ட் போட்டிகளில் எட்டாவது தடவையாகவும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அணில் கும்ளேவை பின்தள்ளி நான்காவது இடத்தை பிடித்தார் ஹேரத். டெஸ்ட் போட்டிகளில், 22 முறை 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி முத்தையா முரளிதரன் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து துடுப்பாடிய கிராம் கிரிமர் மற்றும் டொனால்ட் திரிபனோ 9வது விக்கெட்டுக்காக மேலும் 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஜிம்பாப்வே அணியை மேலும் வலுப்படுத்தினர். 19 ஓட்டங்களை பதிவு செய்த டொனால்ட் திரிபனோ, டில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் LBW முறையிலும், 5 பௌண்டரிகள் உட்பட 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அணித் தலைவர் கிராம் கிரிமர் 48 ஓட்டங்களுக்கு ரங்கன ஹேரத்தின் 6வது விக்கெட்டாக திமுத் கருணாரத்னவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர்.

அந்த வகையில், 107.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 377 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனவே அவ்வணி இலங்கை அணிக்கு 388 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்சிலும் நேர்த்தியாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 133 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திருந்த அதேவேளை, அவர் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 249 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, குறித்த இலக்கை நோக்கி துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், 27 ஓட்டங்களை பெற்றிருந்த  உபுல் தரங்க ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம் கிரிமரின் சூழல் பந்து வீச்சில் ஹாமில்டன் மஸகாட்சாவிடம் பிடி கொடுத்து களத்திலிருந்து வெளியேறினார்.     

அதனைத் தொடர்ந்து திமுத் கருணாரத்னவுடன் இணைந்துகொண்ட குசல் மெண்டிஸ் அபாரமாக துடுப்பாடி இரண்டாம் விக்கெட்டுக்காக மேலும் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். திமுத் அரைச் சதத்தினை ஓட்டத்தினால் தவறவிட்டார். அவர் 49 ஓட்டங்களுடன் சோன் வில்லியம்ஸின் பந்து வீச்சில் துரதிஷ்டவசமாக நேரடியாக போல்ட் முறையில் அட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவரை தினேஷ் சந்திமாலுக்கு இம்முறை ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு ஜிம்பாப்வே அணியினர் இடமளிக்கவில்லை. நேர்த்தியாக பந்து வீசிய கிராம் கிரிமர் தினேஷ் சந்திமாலின் விக்கெட்டினை 15 ஓட்டங்களுக்கு வீழ்த்தினார்.

இன்றைய நாள் இறுதி வரை அட்டமிழக்காமல் துடுப்பாடிய குசல் மெண்டிஸ் 6 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது நான்காவது அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார். அத்துடன் அவருடன் துடுப்பாடிய முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் நான்காவது விக்கெட்டுக்காக 37 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். மெதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களுடன் களத்திலிருக்கின்றார். நாளை போட்டியின் இறுதி நாளாகும்.

இதற்கு முன்னதாக, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த 377 ஓட்டங்களை எட்டி பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியிருந்தமையே சாதனையாக உள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியை சவாலுக்குட்படுத்தும் வகையில் ஜிம்பாப்வே அணி 388 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

[/vc_column_text]

[/vc_column][/vc_row]