ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண முதல் போட்டியில் இலங்கை அணிக்கு இலகு வெற்றி

252
5th AHF Cup: Sri Lanka Team

ஹொங் கொங்கில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணப் போட்டித் தொடரில் உஸ்பகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் இலங்கை ஹொக்கி அணி 7-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணத்துக்காக ஹொங் கொங் செல்லும் இலங்கை ஹொக்கி அணி

உஸ்பகிஸ்தான் உடனான இப்போட்டியில் நலந்த டி சில்வா தலைமையிலான இலங்கை தேசிய ஹொக்கி அணி, தமது ஆதிக்கத்தினையே முழுமையாக செலுத்தியது. போட்டியின் வெற்றிக்காக, அணியின் மூத்த வீரர் சந்தருவன் பிரியலங்கா ஹட்ரிக் கோல் அடித்த அதேவேளை, ஷமிக்க குணவர்தன 2 கோல்களையும் தினேஷ் விஜேசிங்க மற்றும் லஹிறு பந்தியே ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆட்டத்தின் முதல் பாதியின் 14ஆவது நிமிடத்தில் சந்தருவன் முதலாவது கோலையும், அதன் பின்னர் சாமிக்க குணவர்தன தொடர்ந்து இரண்டு கோல்களையும் பெற்றுக்கொண்டனர். இதன் காரணமாக முதல் பாதி முடிவில் இலங்கை அணி மூன்று கோல்களை பெற்றுக்கொண்ட அதேநேரம் உஸ்பகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்திருந்தது.

முதல் பாதி: இலங்கை 03 – 01 உஸ்பகிஸ்தான்

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆரம்பித்ததும் எதிரணியை அதிர வைத்த சந்தருவன் பிரியலங்க தொடர்ந்து 2 கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் 62ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலையும் பெற்றுக்கொடுக்க, அது அவருடைய ஹட்ரிக் கோலாக மாறியது.

இலங்கை அணி இரண்டாம் பாதியிலும் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தினேஷ் விஜேசிங்க மற்றும் லஹிறு பந்தியே ஆகியோரும் தலா கோல்களை மேலதிகமாகப் பெற்றுக்கொடுக்க ஆட்டம் மழுமையாக இலங்கை அணியின் பக்கம் சாய்ந்தது.

உஸ்பகிஸ்தான் அணி சார்பாக ஒகுஞ்சன் மிசகரிமு மற்றும் கய்புல்லோ கேத்பேவ் ஆகியோர் தலா ஒரு கோலினைப் பெற்றுக்கொண்டனர்.

முழு நேரம்: இலங்கை 07 – 02 உஸ்பகிஸ்தான்

கோல்கள் பெற்றுக்கொண்டவர்கள்

இலங்கை அணி – சந்தருவன் பிரியலங்க 03, சாமிக்க குணவர்தன 02, சந்தருவன் 01, தினேஷ் விஜேசிங்க 01, லஹிறு பந்தியே 01

உஸ்பகிஸ்தான் அணி – ஒகுஞ்சன் மிசகரிமு மற்றும் கய்புல்லோ கேத்பேவ்

ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண போட்டிகளில் B குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை அணியுடன் சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

தமது  இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து, குழு மட்டத்திலான தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணி நாளை 22ஆம் திகதி சிங்கப்பூர் அணியுடனும், அதனை தொடர்ந்து 24ஆம் திகதி தாய்லாந்து அணியுடனும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.