புளூஸ் அணியை தோல்வியிலிருந்து மீட்ட அஷேன், சஹன்!

Dialog-SLC Invitational T20 League 2021

1318
 

டயலொக் SLC அழைப்பு T20 லீக்கில் இன்று (14) நடைபெற்ற SLC கிரீன் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், அஷேன் பண்டார மற்றும் சஹன் ஆராச்சிகே ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்பால் SLC புளூஸ் அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிரீன்ஸ் அணி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த விரைவில் ஆட்டமிழந்த போதும், அதன் பின்னர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் கடந்ததுடன், லஹிரு உதாரவும் மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஷானகவின் பொறுப்பான ஆட்டத்தால் கிரேய்ஸ் அணிக்கு 2வது வெற்றி

இவர்கள் மூவரின் சிறந்த ஓட்டக்குவிப்புடன் 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த கிரீன்ஸ் அணி, 182 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த பெதும் நிஸ்ஸங்க 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 3 சிக்ஸர்க்ள மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவர்களுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சிறந்த பங்களிப்பை வழங்கிய லஹிரு உதார , 39 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷன 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் கடினமான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய SLC புளூஸ் அணி, சதீர சமரவிக்ரமவின் மிகச்சிறந்த ஆரம்பத்துடன் ஓட்டங்களை குவித்த போதும், மத்திய ஓவர்களில் தடுமாறியது. எனினும், இறுதி ஓவர்களில் அஷேன் பண்டார மற்றும் சஹன் ஆராச்சிகே ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவிக்க, மூன்று பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில், SLC புளூஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது.

புளூஸ் அணிசார்பாக அதிகபட்சமாக 47 ஓட்டங்களை சதீர சமரவிக்ரம பெற்றுக்கொண்ட போதும், இறுதி 5 ஓவர்களில் அஷேன் பண்டார மற்றும் சஹன் ஆராச்சிகே ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

சஹன் ஆராச்சிகே 22 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அஷேன் பண்டார சிக்ஸரை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இவர், 18 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 3 பந்துகள் எஞ்சியிருக்க 5 விக்கெட்டுகளை இழந்து புளூஸ் அணி வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்மூலம் SLC புளூஸ் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்ததுடன், SLC கிரீன்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…