ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவில் திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் முதல் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில் காணப்படுகின்றது.

முதற்தடவையாக இலங்கை அணி பங்கேற்கும் பகலிரவு ஆட்டமான இந்த டெஸ்ட் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதன்படி இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி இப்போட்டியில் களமிறங்கியிருந்தது. அறிமுக வீரர்களான சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு கமகே ஆகிய வீரர்கள் அணியில் உள்வாங்கப்பட லஹிரு திரிமான்ன மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். மறுமுனையில் பாகிஸ்தான் அணி காயமடைந்த ஹசன் அலிக்கு பதிலாக வஹாப் ரியாசை அணிக்கு அழைத்திருந்தது.

தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கெளஷால் சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் அணிக்கு ஒரு உறுதியான அடித்தளம் ஒன்றை அமைக்க முயற்சி எடுத்திருந்தனர். எனினும் இலங்கை அணி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கெளஷால் சில்வா பாகிஸ்தானின் சுழல் வீரர் யாசிர் ஷாஹ்வின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் சர்பராஸ் அஹ்மட் இடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் உறுதியான ஆரம்பம் கைகூடியிருக்கவில்லை. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்த கெளஷால் சில்வா 27 ஓட்டங்களைப் பெற்று இத்தொடரில் மீண்டும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தார்.

சில்வாவை அடுத்து தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சதீர சமரவிக்ரம களம் நுழைந்து திமுத் கருணாரத்ன உடன் சேர்ந்து ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார். இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் போட்டியின் தேநீர் இடைவேளை வரை அணியை வலுப்படுத்தினர். திமுத் கருணாரத்ன தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக தனது 14 ஆவது அரைச் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் விடுவிப்பு

இரு அணி வீரர்களுக்கும் இந்த இடைவேளையில் வழங்கப்பட்ட ஓய்வினை அடுத்து போட்டி தொடர்ந்தது. சற்று வேகமாக துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சதீர சமரவிக்ரம போட்டியின் 37ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொஹமட் அமீர் வீசிய பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து இலங்கையின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரமவின் இந்த விக்கெட்டினால் இலங்கையின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் 68 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

ஆட்டமிழக்கும் போது சதீர 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 38 ஓட்டங்களைக் குவித்து நல்லதொரு கன்னி இன்னிங்சை வெளிக்காட்டியிருந்தார்.

சதீரவை தொடர்ந்து மைதானம் விரைந்த குசல் மெண்டிஸ் வெறும் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை திரும்பி முதலாவது டெஸ்ட் போட்டி போன்று இம்முறையும் மோசமான ஆட்டத்தை காண்பித்திருந்தார்.

கௌஷால் சில்வாவின் விக்கெட்டை அடுத்து இரண்டு விக்கெட்டுகள் விரைவாக பறிபோனமையால் ஒரு பதட்டத்தை உணர்ந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் நிதானமான முறையில் செயற்படத் தொடங்கினர். இதனால் போட்டியின் இராப்போசணம் வரை இலங்கை அணியில் மேலதிக விக்கெட் ஒன்று பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டது.

போட்டியின் இராப்போசணத்தின் பின் தொடர்ந்த ஆட்டத்தில் திமுத் கருணாரத்ன தனது ஏழாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததோடு, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கைக்காக சதம் கடந்த முதல் வீரராகவும் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

நீண்ட இணைப்பாட்டம் ஒன்றாக மாற ஆரம்பித்த இந்த இரண்டு வீரர்களதும் விக்கெட்டுகளை வீழ்த்துவது பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக அமைந்திருந்தது. போட்டியில் தொடர்ந்து எடுக்கப்பட்ட புதிய பந்தில் தினேஷ் சந்திமாலின் விக்கெட்டுக்காக ஒரு ஆட்டமிழப்பை மொஹமட் அப்பாஸ் வீசிய 89 ஆவது ஓவரின் போது பாகிஸ்தான் வீரர்கள் தொலைக்காட்சி நடுவரிடம் கோரியிருந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து போட்டியின் முதல் நாள் முடிவில் சந்திமால் மற்றும் கருணாரத்ன ஆகியோரின் உறுதியான இணைப்பாட்டத்துடன் (118*) தமது முதல் இன்னிங்சுக்காக இலங்கை அணியானது 90 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களுடன் சிறப்பான நிலை ஒன்றை அடைந்தது.

திமுத் கருணாரத்ன 133 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட யாசிர் ஷாஹ் இரண்டு விக்கெட்டுகளை இன்றைய நாளில் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 254/3 (90) – திமுத் கருணாரத்ன 133*(281), தினேஷ் சந்திமால் 49*(153), சதீர சமரவிக்ரம 38(35), யாசிர் ஷாஹ் 90/2 (29.3)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்.