ஆப்கானிஸ்தான் சுழலுக்கு பதில் கூறுமா இலங்கை?

817

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்த இலங்கை அணி நாளைய தினம் (04) ஆப்கானிஸ்தான் அணியை கார்டிப்பின் சோபியா கார்டன் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

இதே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் 300 என்ற ஓட்ட எண்ணிக்கையை துரத்திக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இலங்கை அணியின் துடுப்பாட்டம் அணியின் எழுச்சியில் பாரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன

கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு …….

ஆனாலும், முதல் போட்டியில் கார்டிப் மைதானத்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான புற்கல் நிறைந்த ஆடுகளமாக (Green Pitch) தயார் செய்யப்பட்டிருந்தமையால் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாகவே தடுமாறியிருந்தனர். துடுப்பாட்ட வீரர்கள் ஒருபக்கம் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருக்க, பந்து வீச்சாளர்களும் முதல் போட்டியில் எந்தவொரு விக்கெட்டினையும் வீழ்த்தாமல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில், அணித் தலைவர் என்ற ரீதியில் திமுத் கருணாரத்ன நிதானமாக துடுப்பெடுத்தாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 52 ஓட்டங்களை பெற்றார். இவ்வாறு துடுப்பெடுத்தாடிய இவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காத இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இவ்வாறு, திமுத் கருணாரத்னவை தவிர்த்து ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடாத நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இலங்கை அணி எவ்வாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள போகின்றது என்பதும் கேள்வியாக மாறியுள்ளது.

Photos: CWC19 – Sri Lanka training session ahead of Afghanistan match

அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியானது இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியினை சந்தித்திருந்த போதும், அவர்களது உத்வேகம் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக கடந்த காலங்களில், பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள்  அணியை வீழ்த்தி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் சம்பியனாகியிருந்த ஆப்கானிஸ்தான் அணி, இறுதியாக பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியிருந்தது.


தற்போது, பலம் பொருந்திய அணிகளுக்கு திடீர் அதிர்ச்சிகளை வழங்கும் அணியாக உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களை 2-2 மற்றும் 1-1 என சமப்படுத்தியிருந்ததுடன், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-0 என கைப்பற்றியிருந்தது.

ரஷீட் கான், மொஹமட் நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் என சர்வதேச T20 தொடர்களில் விளையாடிய அனுபவமிக்க வீரர்கள் அந்த அணியில் உள்ளமை ஆப்கானிஸ்தான் அணிக்கு மேலதிக பலமாக அமைந்துள்ளது.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரையில் அதிகமான ஒருநாள் போட்டிகளில் சந்தித்ததில்லை. இந்த இரண்டு அணிகளும் ஒட்டுமொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், 2 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளது. அத்துடன், இதற்கு முன்னர் ஒரு உலகக் கிண்ணப் போட்டியில் மாத்திரம் இரண்டு அணிகளும் மோதியுள்ளதுடன், இலங்கை அணி குறித்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.

ஆனாலும், இறுதியாக ஆசிய கிண்ணத் தொடரில் இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 249 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இந்த வெற்றியிலக்கை நோக்கிய இலங்கை அணி 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்திருந்தது. முக்கியமாக இந்தப் போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

லசித் மாலிங்க

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிகம் எதிர்பார்க்கப்படும் இலங்கை வீரராக லசித் மாலிங்க உள்ளார். இவர், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், அணியை தனது அனுபவ பந்துவீச்சு மூலம் முன்னோக்கி அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் 219 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 322 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டு ஹெட்ரிக்குகள் அடங்கலாக 22 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவ்வாறு உலகக் கிண்ணத்தில் அதிகம் அனுபவம் கொண்ட மாலிங்க, இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசும் வல்லமையும் கொண்டுள்ளார். எனவே, நாளைய போட்டியில் மாலிங்கவின் மூலமாக இலங்கை அணிக்கு ஏதாவது சாதகம் ஏற்படுமா? என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷீட் கான்

சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கானின் மீதான எதிர்பார்ப்பும் இந்தப் போட்டியில் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் தனது சுழல் மாயாஜாலத்தால், இலங்கை அணியை கட்டுப்படுத்திய இவர், மீண்டும் இலங்கை அணிக்கு சவாலான ஒரு பந்துவீச்சாளராக மாறியிருக்கிறார்.

ரஷீட் கான் இதுவரையில், 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 126 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், இவரது பந்துவீச்சு சராசரி 15.62 ஆக உள்ளதென்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தேச பதினொருவர்

இலங்கை

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, நுவான் பிரதீப்

Photos: CWC19 – Sri Lanka training session ahead of Afghanistan match

ThePapare.com | 02/06/2019 Editing and re-using ………

ஆப்கானிஸ்தான்

மொஹமட் சேஷார்ட், ஹஷரதுல்லாஹ் சஷி, ரெஹமட் சாஹ், ஹஸ்மதுல்லாஹ் rஹிடி, மொஹமட் நபி, குல்பதீன் நயிப் (தலைவர்), நஜிபுல்லாஹ் சர்டான், ரஷீட் கான், தவ்லத் சர்டான், முஜீப் உர் ரஹ்மான், ஹமிட் ஹசன்

ஆடுகளம் மற்றும் காலநிலை

கார்டிப் மைதானத்தை பொருத்தவரை முதல் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இறுதியில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான புற்கல் நிறைந்த ஆடுகளம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கும், முதல் போட்டிக்கும் இடையில் பெரிய கால இடைவெளிகள் இல்லாத காரணத்தால், மீண்டும் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பதுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓளரவு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டியில் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மழை காரணமாக இலங்கை அணி தங்களுடைய பயிற்சிகளை உள்ளக பயிற்சிக்கூடத்தில் (Indoor) மேற்கொண்டிருந்தது. இதனால், நாளைய போட்டியில் மழை குறுக்கிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<