மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

1788

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவுள்ள 17 வீரர்கள் அடங்கிய இலங்கையின் பலம் மிக்க டெஸ்ட் அணிக்குழாம் இன்று (11) வெளியிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் ஆகிய இருவரும் இந்த டெஸ்ட் அணிக் குழாமில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர்களின் உடற்தகுதியை சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் தேசிய அணியின் தேர்வாளர்கள் இருக்கின்றனர். இதேவேளை, 31 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான மஹேல உடவத்த காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவுக்கு பிரதியீடாக டெஸ்ட்  அணி குழாமில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை அணிக்காக 2008 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மஹேல உடவத்த அறிமுகமாயிருந்த போதிலும் டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடியிருக்கவில்லை. எனவே,  மஹேல உடவத்தவிற்கு இந்த சுற்றுப் பயணம் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவிருக்கின்றது. அண்மையில் முடிவடைந்த மாகாண அணிகளுக்கு இடையிலான முதல் தர கிரிக்கெட் தொடரில் மஹேல உடவத்த 56.60 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் மொத்தமாக 283 ஓட்டடங்களைக் குவித்திருந்ததோடு, தற்போது நடைபெற்று வரும் மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 188 ஓட்டங்களை சேர்த்து சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

“மஹேல உடவத்த திமுத் கருணாரத்னவை நேரடியாக பிரதியீடு செய்யும் வீரராக உள்ளார். அவர் அண்மைய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஓட்டங்கள் சேர்த்த காரணத்தினால் இலங்கை அணிக்குள் உள்வாங்குவதற்கு (தேசிய அணியின்) ஏனைய தேர்வாளர்களும் தங்களது சம்மதத்தை வழங்கியிருந்தனர். அவர் போதியளவு சர்வதேச போட்டிகளில் விளையாடாது இருப்பினும், உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடி மிகவும் நல்ல அனுபவத்தை கொண்டிருக்கின்றார்“ என மஹேல உடவத்த இலங்கை டெஸ்ட் அணிக் குழாமில் உள்வாங்கப்பட்ட காரணத்தினை இலங்கை அணியின் சிரேஷ்ட தேர்வாளர் கிரேம் லப்ரோய் ThePapare.com இற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் இந்த டெஸ்ட் அணிக் குழாமில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களும் மஹேல உடவத்த போன்று அண்மையில் நடந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதன் மூலமே இந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.

இலங்கை அணிக்காக இதற்கு முன்னர் மூன்று T20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கசுன் ராஜித, அண்மையில் நடந்து முடிந்த மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் 20.50 என்ற சராசரியோடு 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் 20 வயதேயான அசித்த பெர்னாந்து தற்போது நடைபெற்று வருகின்ற மாகாண ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்ததோடு, இதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான முதல் தர ப்ரீமியர் லீக் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுக்களை கைப்பற்றி வேகப்பந்து வீச்சாளராக நல்ல பதிவைக் காட்டியிருந்தார்.

இலங்கை அணியின் களத்தடுப்புக்கு என்ன நடந்தது?

“நாங்கள் அவர்களை (கசுன் மற்றும் அசித்த) முழுமையாக அவர்களது அண்மைய போட்டிப் பதிவுகள் மற்றும் ஆற்றல்கள் என்பவற்றை வைத்தே தெரிவு செய்திருக்கின்றோம். அண்மைய போட்டிகளில் அவர்கள் தங்களால் எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்பதைக் காட்டியிருந்தனர். துஷ்மந்த சமீர, நுவன் பிரதீப் போன்றவர்கள் காயத்தில் இருப்பதால், அடுத்த உலகக் கிண்ணத்திற்கு முன்னர் நாங்கள் அவர்களுக்கு உயர்மட்ட போட்டி அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்கின்றோம்“ என கிரேம் லப்ரோய் புதிய வீரர்களின் உள்ளடக்கம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் இந்த டெஸ்ட் அணிக் குழாமில் இருக்கும் குறிப்பிடக் கூடிய ஏனைய வீரராக அமைகின்றார். இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளில் நிரந்த வீரராக இருந்து வரும் குசல், 2016 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டி ஒன்றில் இறுதியாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் அணிக் குழாமின் சுழல் பந்துவீச்சுக்கு மேலும் வலுச் சேர்க்க வலதுகை மணிக்கட்டு சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்சே அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணிக்குழாம் – தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), சுரங்க லக்மால் (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), அஞ்சலோ மெதிவ்ஸ் (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, மஹேல உடவத்த, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சே, லஹிரு கமகே, லஹிரு குமார, கசுன் ராஜித, அசித்த பெர்னாந்து.

இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை
  • பயிற்சிப் போட்டி – மே 30 தொடக்கம் ஜூன் 1 வரை, ட்ரினிடாட்
  • முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் ஜூன் 10 வரை, ட்ரினிடாட்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் ஜூன் 18 வரை, சென். லூசியா
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 வரை, பார்படோஸ் (பகலிரவுப் போட்டி)